ACMC பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தம்!!
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான இஷ்ஹாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம், முஷாரப் முதுநபீன் ஆகியோரின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அக்கட்சியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள 2022 ஆம் ஆண்டுக்கான பாதீடு மீதான வாக்கெடுப்பில் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கட்சியின் தலைவர் ரிஷாட் பதியுதீன், இஷ்ஹாக் றஹ்மான், அலி சப்றி ரஹீம் மற்றும் முஷாரப் முதுநபீன் ஆகிய நால்வரும் பாதீட்டுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் எனக் கட்சியின் அரசியல் அதிகார சபைக் கூட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
குறித்த தீர்மானம் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கட்சியின் தலைவர் தவிர்ந்த ஏனைய மூவரும் கட்சியின் தீர்மானத்திற்கெதிராக இன்று (22) பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர்.
இது தொடர்பில் கட்சியின் அரசியல் அதிகார சபைக் கூட்டம் இன்று கூடியபோது ஆராயப்பட்டது.
இதன்போது, கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக பாதீட்டுக்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களான இஷ்ஹாக் ரஹ்மான், அலி சப்ரி ரஹீம், முஷாரப் முதுநபீன் ஆகியோரை கட்சியின் உறுப்புரிமையிலிருந்து இடைநிறுத்துவதாகவும், அவர்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
இதனையடுத்து கட்சியின் தீர்மானத்தை மீறிய மேற்படி மூவரினது கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்தப்படுவதுடன், அவர்களுக்கெதிரான ஒழுக்காற்று நடவடிக்கை கட்சியினால் மேற்கொள்ளப்படுமென அக்கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.சுபைர்தீன் தெரிவித்துள்ளார்.