டெல்லியில் பள்ளி, கல்லூரிகளில் 29ம் தேதி முதல் நேரடி வகுப்புகள் -அமைச்சர் அறிவிப்பு…!!
தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையிலேயே உள்ளது. காற்று மாசைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நவம்பர் 21-ம் தேதி வரை கட்டுமானம், இடிப்பு பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அரசுத் துறைகளின் ஊழியர்கள் வீட்டிலிருந்து 100 சதவீதம் வேலை செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.
மேலும், வாகனங்களால் ஏற்படும் புகையின் அளவை குறைக்கும் வகையில் டெல்லி நகருக்குள் 26-ம் தேதி வரை லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், டெல்லி காற்று மாசை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் தளர்வு குறித்து சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்குப் பிறகு அமைச்சர் பேசுகையில், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி நிறுவனங்களில் நிறுத்தப்பட்டிருந்த நேரடி வகுப்புகள், நவம்பர் 29 முதல் மீண்டும் தொடங்கும் என்றார்.
அனைத்து அரசு அலுவலகங்களும் திங்கட்கிழமை முதல் திறக்கப்படும் என்றும், அரசு ஊழியர்கள் பொது போக்குவரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்தியாவசிய சேவைகளுக்கான வாகனங்கள் தவிர, எரிவாயுவால் இயக்கப்படும் வாகனங்கள், மின்சார வாகனங்கள் மட்டும் நவம்பர் 27 முதல் டெல்லிக்குள் அனுமதிக்கப்படும். மற்ற எரிபொருட்களில் இயங்கும் வாகனங்கள் நுழைவதற்கான தடை டிசம்பர் 3ம் தேதி வரை நீடிக்கும் எனறும் அமைச்சர் தெரிவித்தார்.