பெண்களுக்கெதிரான வன்முறையை இப்போதே நிறுத்துவோம்!! (படங்கள்)
யாழ்ப்பாண மாவட்டச் செயலகமும், யாழ்.சமூக செயற்பாட்டு மையமும் இணைந்து UNHCR இன் நிதி அனுசரணையுடன் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் ” பெண்களுக்கெதிரான வன்முறையை இப்போதே நிறுத்துவோம்” எனும் தொனிப்பொருளில் பால்நிலை வன்முறைக்கு எதிரான பதினாறுநாள் செயற்திட்டத்தின் (கார்த்திகை 25-மார்கழி10) ஆரம்ப நிகழ்வு இன்றைய தினம் (2021.11.25) காலை 9.30 மணிக்கு யாழ்.மாவட்டச் செயலகத்தில் நடைபெற்றது. இந் நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவி மாவட்டச் செயலாளர், யாழ்.சமூக செயற்பாட்டு மைய இணைப்பாளர், UNHCR பிரதிநிதி மற்றும் மாவட்ட பெண்கள் அபிவிருத்தி இணைப்பாளர், யாழ்.சமூக செயற்பாட்டு மைய உத்தியோகத்தர்கள் ஆகியோரும் பங்குபற்றியிருந்தனர்.
இந் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போது ” இலங்கை மற்றும் உலகளாவியரீதியில் பால்நிலை மற்றும் பெண்கள் சிறுவர்களுக்கு எதிரான வன்முறையை குறைத்தல் போன்ற விடயங்கள் மிக முக்கியம் பெற்றுள்ளன. நாளாந்தம் இவ் வன்முறைகள் பல்வேறுவகையில் பெண்கள் மற்றும் சிறுவர்களை பாதித்துவருகிறது. மிக கொடூரமான வன்முறையாக இது உருவெடுத்துள்ளது. இலங்கை அரசாங்கம் மற்றும் சமூக மட்ட அமைப்புகள் இந்நிலமையை மாற்ற செயற்பட்டு வருகிறார்கள். அந்தவகையில் இப் பதினாறு நாள் செயலமர்வு மிகவும் அவசியமாகவுள்ளது. எமது சமூகத்தில் பெண்களுடைய வகிபாகம் பிரதானமானது ஆகும். அவர்கள் சமூக பொருளாதார மற்றும் அரசியலில் பல்வேறு நிலைகளில் பிரகாசிக்கிறார்கள். ஆகவே இந்த பால்நிலை சமத்துவத்தின் மூலம் அவர்களின் முடிவெடுக்கும் திறனை கட்டியெழுப்புதல் வேண்டும் எனவே பெண்கள், சிறுவர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்த நாம் அனைவரும் செயற்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மேலும், இந் நிகழ்வில் பால்நிலை வன்முறைக்கு எதிரான விழிப்புணர்வு பிரசுரம் வெளியிட்டு வைக்கப்பட்டதுடன், யாழ்.மாவட்ட பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான செயலமர்வு நடைபெற்றமையும் குறிப்பிடத் தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”