மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தின் 5 ஆவது இலக்கிய விழா!! (படங்கள்)
மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் கலாசார அதிகார சபையும் இணைந்து நடாத்திய மண்முனைப்பற்று பிரதேச இலக்கிய விழா இன்று 25.11.2021 வியாழக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற்றது.
மண்முனைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி.ந.சத்தியானந்தி தலைமையில் ஆரையம்பதி நந்தகோபன் கலாசார மண்டபத்தில் இடம் பெற்ற நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான கே.கருணாகரன் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார்.
அதிதிகள் வரவேற்பினை தொடர்ந்து, மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டதனைத் தொடர்ந்து வரவேற்புரை, வரவேற்பு நடனம் மற்றும் பிரதேச செயலாளரின் தலைமை உரை என்பன இடம்பெற்றது.
அதனைத் தொடர்ந்து புதிய மழை தூறல் – 5 நூலானது பிரதேச செயலாளரினால் வெளியிட்டுவைக்கப்பட்டதுடன், நூலின் முதற்பிரதி பிரதம அதிதியாக கலந்துகொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏனைய சிறப்பு மற்றும் கௌரவ அதிதிகள் உள்ளிட்ட கலைஞர்களுக்கும் பிரதேச செயலாளரினால் நூலின் பிரதிகள் வழங்கிவைக்கப்பட்டது.
தொடர்ச்சியாக 5 ஆவது தடவையாக இடம்பெற்றுவரும் இலக்கிய விழாவில் இவ்வாண்டிற்கான இலக்கிய துறைக்கான கெளரவம் மூத்த இலக்கியவாதியான ச.க.பொன்னம்பலம் அவர்களுக்கு பிரதம அதிதியாக கலந்துகொண்ட மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன் அவர்களினால் வழங்கிவைக்கப்பட்டது.
சுகாதார முறைப்படி இடம்பெற்ற நிகழ்வினை ஆரையூர் கலாமன்றம், இலங்கேஸ்வரா இசைக்குழு மற்றும் இராமகிருஷ்ண மிசன் பாடசாலை மாணவர்கள் உள்ளிட்ட கலைஞர்களின் கலைப்படைப்புக்கள் மேடையை அலங்கரித்திருந்ததுடன், நிகழ்வில் கலந்து கொண்டு தமிழ் மொழி வாழ்த்துப்பாவினை பாடிய மாணவர்களுக்கும் அதிதிகளால் பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டன.
அத்தோடு குறித்த நிகழ்விற்கு சிறப்பு அதிதியாக கோட்டக்கல்வி அதிகாரி எஸ்.தில்லைநாதன் கலந்துகொண்டிருந்ததுடன், உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.எல்.விவேகானந்தராஜா, நிருவாக உத்தியோகத்தர், கிராம உத்தியோத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள், கலாசார அதிகாரசபையின் உறுப்பினர்கலென மட்டுப்படுத்தப்பட்டளவிலானோர் கலந்துகொண்டு நிகழ்வினை சிறப்பித்திருந்தனர்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”