டெல்லியில் கட்டுமான பணிகளுக்கு மீண்டும் தடை- உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து நடவடிக்கை…!!
தலைநகர் டெல்லியில் காற்று மாசு தொடர்ந்து மோசமான நிலையிலேயே உள்ளது. காற்று மாசைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. நவம்பர் 21-ம் தேதி வரை கட்டுமானம், இடிப்பு பணிகளுக்கு தடை விதிக்கப்பட்டது. அரசுத் துறைகளின் ஊழியர்கள் வீட்டிலிருந்து 100 சதவீதம் வேலை செய்யவேண்டும் என அறிவிக்கப்பட்டது. பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன.
மேலும், வாகனங்களால் ஏற்படும் புகையின் அளவை குறைக்கும் வகையில் டெல்லி நகருக்குள் 26-ம் தேதி வரை லாரிகள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. எனினும் காற்றின் தரம் எதிர்பார்த்த அளவிற்கு சீரடையவில்லை. எனவே, டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (என்சிஆர்) கட்டுமானப் பணிகளுக்கு உச்ச நீதிமன்றம் மீண்டும் தடை விதித்தது. மேலும், தடை செய்யப்பட்ட காலத்திற்கு தொழிலாளர் வரியாக வசூலிக்கப்படும் நிதியிலிருந்து தொழிலாளர்களுக்கு நிதியுதவி வழங்குமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.
காற்று மாசு
உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து கட்டுமானப் பணிகள் மற்றும் கட்டுமான இடிப்பு நடவடிக்கைகளுக்கு மீண்டும் தடை விதிக்க அரசு முடிவு செய்துள்ளதாக டெல்லி சுற்றுச்சூழல் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தார். இந்த தடை உத்தரவு தொழிலாளர்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் என்பதால், அவர்களுக்கு நிதியுதவி வழங்கப்படும் என்றும், இதற்கான திட்டத்தை தயாரிக்க தொழிலாளர் துறைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.