ரஷ்யாவில் சோகம் – நிலக்கரிச் சுரங்க தீவிபத்தில் சிக்கி 14 தொழிலாளர்கள் பலி..!!
ரஷ்யாவின் செர்பியா மாகாணத்தில் லிஸ்ட்யாஸ்னியா நிலக்கரி சுரங்க நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் உள்ள சுரங்கத்தில் நேற்று 250-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் 820 அடி ஆழத்தில் நிலக்கரி வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது சுரங்கத்தில் ஏற்பட்ட பயங்கர தீவிபத்தால் சுரங்க மேற்கூரை இடிந்து விழுந்ததில், அங்கு வேலை செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் சிக்கினர்.
தீவிபத்து குறித்து தகவலறிந்த மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தொழிலாளர்களை மீட்கும் நடவடிக்கையில் இறங்கினர். இதில், இடிபாடுகளுக்குள் சிக்கிய 225க்கும் அதிகமானோரை உயிருடன் மீட்டனர்.
இந்நிலையில், இந்த விபத்தில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டனர். இதனால் சுரங்க இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணிகள் நடந்து வருகிறது.
இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.