கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை சீனாவுக்கு வழங்க அரசு தீர்மானம்!!
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை சீனாவின் ஹார்பர் இன்ஜினியரிங் நிறுவனத்துக்கு வழங்குவதற்கு அரச உயர்மட்டம் தீர்மானித்துள்ளதாக அறிய முடிகிறது
துறைமுகத்தின் மேற்கு முனையம், இந்திய கூட்டு நிறுவனமான அதானிக்கு 700 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நிலையில், அரசு இந்தத் தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பில் கடந்த திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமை யிலான அமைச்சரவைக் கூட்டத்தில்
கலந்துரையாடப்பட்டுள்ளது.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை சீனாவின் அரச நிறுவனமான ‘சைனா ஹார்பர் இன்ஜினியரிங் கம்பனி’ என்ற நிறுவனத்துக்கு வழங்குவது தொடர்பில் பேசப்பட்டது. சீன நிறுவனத்துக்கு கிழக்கு முனையத்தை வழங்குவதாக தீர்மானிக்கப்பட்டபோதிலும் அதன் நடவடிக்கைகள் அனைத்தையும் உள்நாட்டு அதிகாரிகளே கையாளவேண்டுமெனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டதாக அறியமுடிந்தது.
இதேவேளை, இந்திய – சீன நாடுகளுக்கிடையிலான உறவில் நடுநிலை வகிக்க விரும்புவதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை இந்திய ஜப்பான் நாடுகளுக்கு வழங்குவதற்கான ஒப்பந்தம் கடந்த 2019ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் கைச்சாத்திடப்பட்டது. எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் அந்த ஒப்பந்தத்தை நிராகரித்ததுடன் மேற்கு முனையத்தை வழங்குவதற்கு தீர்மானித்தது.
இந்நிலையிலேயே கிழக்கு முனையத்தை சீனாவுக்கு வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக தென்னிலங்கையில் இருந்து “எல்லாளன்”