இந்தியாவில் கொரோனா நிலவரம்- புதிதாக 10,549 பேருக்கு தொற்று…!!
நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று 83,88,824 டோஸ் தடுப்பூசிகள் மக்களுக்கு போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதன்மூலம் இதுவரை செலுத்தப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 120 கோடியே 27 லட்சத்தை கடந்துள்ளது.
இதற்கிடையே மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்ட அறிக்கையில், காலை 8 மணி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் 10,549 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ளது.
இதில் அதிகபட்சமாக கேரளாவில் 5,987 பேர் அடங்குவர். மொத்த பாதிப்பு 3 கோடியே 45 லட்சத்து 55 ஆயிரத்து 431 ஆக உயர்ந்தது.
கொரோனா பாதிப்பால் கேரளாவில் 384 பேர் உள்பட நாடு முழுவதும் மேலும் 488 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,67,468 ஆக அதிகரித்துள்ளது.
தொற்று பாதிப்பில் இருந்து 9,868 பேர் நலம் பெற்று வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை 3 கோடியே 39 லட்சத்து 77 ஆயிரத்து 830 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது 1,10,133 பேர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்திய மருத்துவஆராய்ச்சி கவுன்சில் தகவல்படி நேற்று 11,81,246 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 63.71 கோடியாக உயர்ந்துள்ளது.