யாழ்ப்பாண மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் தொடர்பான குழுக்கூட்டம்!! (படங்கள்)
யாழ்ப்பாண மாவட்ட காணிப்பயன்பாட்டு திட்டமிடல் தொடர்பான குழுக்கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் திரு.கணபதிப்பிள்ளை மகேசன் அவர்களின் தலைமையில் இன்றையதினம் (26.11.2021) காலை பத்து மணிக்கு மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.மகேசன் அவர்கள்,
காணிக்கோரிக்கைகளுக்கான அனைத்து ஆவணங்களையும் பூரணமான முறையில் பிரதேச செயலகங்களில் சமர்ப்பிக்கும்பட்சத்தில் அங்கு நடைபெறும் பிரதேச மட்ட பயன்பாட்டுத் திட்டமிடல் கலந்துரையாடலில் அனுமதி வழங்கப்படுபவை மட்டும் மாவட்ட மட்ட காணிப் பயன்பாட்டு கலந்துரையாடலில் சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டதோடு பிரதேச மட்ட தீர்மானங்களை மேற்கொள்ளும்போது பிரதேச மற்றும் சமூகம் அமைப்புக்களின் கலந்து கொள்ளலுடன் தீர்மானம் மேற்கொள்ளப்படுமென தெரிவித்தார்.
அத்துடன் யாழ்ப்பாண மாவட்ட த்தில் அரச காணியின் அளவு மிகக் குறைவாக காணப்படுவதால் காணிகளை வழங்கும்போது தேவை அடிப்படையிலும்,முன்னுரிமை அடிப்படையிலும் வழங்கப்படுவதோடு அக்காணிகள் உரிய காலப்பகுதிக்குள் பயன்படுத்தப்படுகின்றதா என்பதை அந்தந்தப் பிரதேச செயலாளர்கள் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டுமென தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் திரு.ம.பிரதீபன், காணித் திட்டமிடல் உதவிப் பணிப்பாளர் பணிப்பாளர் திருமதி . சிவஞானவதி மற்றும் பிரதேச செயலர்கள், திணைக்களத்தலைவர்கள் மற்றும் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”