சுகாதார விதிமுறைகளை மீறி யாழில் போராட்டம் – வேடிக்கை பார்த்த பொலிஸார்!! (படங்கள்)
கொரோனா விதிமுறைகளை மீறி, சிறுவர்கள் உள்ளிட்டவர்களை அழைத்து வந்த நபரொருவர் “புலிகள் கொலைகாரர்கள்” என யாழ்.நகர் பகுதியில் சிறிய போராட்டத்தை நடாத்தி இருந்தார்.
யாழ்.மத்திய பேருந்து நிலையம் முன்பாக இன்றைய தினம் சனிக்கிழமை காலை தேசிய கொடிகள் சகிதம் சுகாதார விதிமுறைகள் எவற்றையும் கடைப்பிடிக்காது , முக கவசங்கள் கூட அணியாதவாறு வந்த நபர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எவ்வித சுகாதார நடைமுறைகளையும் பின் பற்றாது போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை பொலிஸார் வேடிக்கை பார்த்த வண்ணம் இருந்தனர். சிறிது நேரத்தின் பின்னர் அவ்விடத்தில் நிற்க வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியமையால் அவர்கள் அவ்விடத்தில் இருந்து விலகி சென்றனர்.
முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன் , முக கவசம் அணியாதவர்களை பொலிஸார் கைது செய்து நீதிமன்றங்களில் முற்படுத்தி நீதிமன்றங்களால் தண்டப்பணம் அறவிடப்படுகிறது.
இந்நிலையில் நபர் ஒருவர் எவ்வித சுகாதார நடைமுறைகளையும் பேணாது , சிறுவர்கள் உள்ளிட்ட சிறு குழு ஒன்றை அழைத்து வந்து போராட்டம் நடாத்திய போது , பொலிஸார் எவ்வித நடவடிக்கையும் இன்றி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தமை , அப்பகுதியில் நின்ற மக்களிடம் கடும் அதிருப்தியும் விசனமும் வெளியிட்டனர்.
நாட்டில் பெருந்தொற்று ஏற்பட்டு .கொரோனா அபாயம் காணப்படுகின்ற நிலையிலும் , யாழிலும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையிலும் , அடிப்படை சுகாதார விதிமுறைகளை பேணாதவர்களை கூட பொலிஸார் கண்டுகொள்ளாமல் இருப்பதும் , பொலிஸார் பாரபட்சமாக நடந்து கொள்ள்ளக்கூடியவர்கள் என பலரும் அதிருப்தி வெளியிட்டனர்.
இதேவேளை சுகாதார பிரிவினர்கள் கூட இது தொடர்பில் மௌனம் காத்து வருகின்றனர். சாதாரணமானவர்கள் சுகாதார விதிமுறைகளை பேண தவறினால் அவர்களை 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த முயற்சிக்கும் சுகாதார பிரிவினர் இந்த விடயத்தில் நடவடிக்கை எடுப்பார்களா எனவும் பலரும் கேள்வி எழுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”