;
Athirady Tamil News

திஸ்ஸ குட்டியாராச்சியின் கருத்து ஒரு காட்டுமிராண்டி நடத்தை!!

0

தனிப்பட்ட முறையிலும், எனது தலைமையிலான அமைப்புகள் சார்பிலும், நம் நாட்டின் பெண்களுக்கு எதிரான அனைத்து நடவடிக்கைகள், அவதூறுகள் ஆகியவற்றை நாம் கண்டிக்கிறோம். இலங்கை ஜனத்தொகை எண்ணிக்கையில் 52 விகிதத்துக்கு அதிகமானோர் நமது பெண்கள் ஆவர். ஆகவே பெரும்பான்மையினரான பெண்களை அவமானப்படுத்தி விட்டு, இலங்கை தேசத்தை கட்டியெழுப்ப முடியாது. பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை கண்டிக்க இன, மத, மொழி, அரசியல் பேதங்களைகளை மறந்து ஒன்றுபடுவோம் என ஜனநாயக மக்கள் முன்னணி, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியுள்ளதாவது, எமது சக பாராளுமன்ற உறுப்பினர் ரோகினி குமாரி விஜேரத்னவுக்கு எதிராக பெண்ணின வெறுப்பு மற்றும் அருவருக்கத்தக்க கருத்துகளை, அரசு தரப்பு எம்பி திஸ்ஸ குட்டியாராச்சி பகிரங்கமாக சபையில் பிரயோகித்துள்ளார். இந்நாட்டு பெண்களை அவமானப்படுத்தும்முகமாக சபையில் சொல்லப்பட்ட இக்கருத்துகளை, பாராளுமன்ற பெண்கள் ஒன்றிய அமைப்பின் தலைவர் ராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபிள்ளை மற்றும் எதிரணி எம்பி தலதா அதுகோரள ஆகியோர், அரசு, எதிரணி பேதங்களுக்கு அப்பால் சென்று கடுமையாக கண்டித்து தமது உரிமைக்கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர்.

மாத்தளை மாவட்ட எம்பி ரோகினி குமாரி விஜேரத்ன உரிமை கோரிக்கை எழுப்பி, தன்னையும், இந்நாட்டு பெண்களையும் நிமிர்ந்து நின்று மகிமைப்படுத்தியுள்ளார்.

அருவருக்கதக்க விதத்தில், பெண்களை அவமானப்படுத்துவதும் பின்னர் அவற்றை விளையாட்டு, கேலி, கிண்டல், அரசியல் என்ற பெயர்களில் மூடி மறைப்பதும், நமது சமூகத்தில் வழமையாக நடைபெறுகிறது. இதுவே அன்று அரசு தரப்பு எம்பி திஸ்ஸ குட்டியாராச்சி வாயில் இருந்தும் பாராளுமன்ற சபையில் வெளிப்பட்டது.

தனிப்பட்ட உரையாடல்களில் இத்தகைய கருத்துகள் கூறப்படுவதையும்கூட அங்கீகரிக்க முடியாது. ஆனால், சிலவேளைகளில் அவை தனிப்பட்ட உரையாடல்களில் ஈடுபடுவோரின் நட்பு நடத்தைகளாக பார்க்கப்படுகின்றன. அவற்றுக்கும் இன்றைய நவீன பெண்கள் முறையாக உரிய பதிலடிகளை அளிக்கின்றனர். ஆனால், இவை பகிரங்கமாக, அதுவும் நாட்டின் அதியுயர் நாடாளுமன்ற சபையில் கூறப்படும்போது, நிலைமை வரம்பு மீறுகிறது. அதை ஒருபோதும் அங்கீகரிக்க முடியாது.

இன்று பாராளுமன்ற பெண்கள் ஒன்றிய பெண் எம்பி உறுப்பினர்களும், நன்னடத்தை கொண்ட அனைவரும் இத்தகைய செயல்களை கண்டித்திருப்பது, இத்தகைய மனப்பான்மை கொண்ட ஆண் பாராளுமன்ற உறுப்பினர்களை உலுக்கி விட்டு அவர்களுக்கு எச்சரிக்கை மணியை அடித்துள்ளது. ஆகவே இந்த சம்பவம் நல்விளைவை ஏற்படுத்தி உள்ளதாவே நான் நம்புகிறேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.