கொட்டும் மழைக்கு மத்தியில் தமிழ்ச்சங்கம் நடத்திய நாவலர் நினைவரங்கம்!! (படங்கள், வீடியோ)
யாழ்ப்பாணத் தமிழ்ச்சங்கம் முன்னெடுத்த நாவலர் நினைவரங்கம் 27. 11. 2021 சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது
தமிழ்ச்சங்கத் தலைவர் செந்தமிழ்ச்சொல்லருவி ச.லலீசன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் நாவலர் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை சூட்டினார். தொடர்ந்து நிகழ்வில் கலந்து கொண்டிருந்தோர் மலரஞசலி செலுத்தினர்.
தமிழ்ச்சங்கப் பெருந் தலைவர் பேராசிரியர் சண்முகதாஸ் தம்பதியர் மங்கல விளக்கு ஏற்றினர்
விரிவுரையாளர் கு.பாலசண்முகன் கடவுள் வணக்கம் பாடினார் . தமிழ்ச் சங்க ஆட்சிக்குழு உறுப்பினர் கருணாகரன் வரவேற்புரை ஆற்றினார்
செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் தொடக்கவுரையையும் யாழ். மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன் வாழ்த்துரையையும் வழங்கினர். தெல்லிப்பழை யூனியன் கல்லூரி உயர்தர வகுப்பு மாணவன் ச.அமலஅசாம் நடையில் நின்றுயர் நாயகன் நாவலர் என்ற பொருளிலும் யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி உயர்தர வகுப்பு மாணவன் ஜெ. தவேதன் எழுந்த கொழுங்கனல் என்ற பொருளிலும் உரையாற்றினர்
சுன்னாகம் ஸ்கந்தவரோதயக் கல்லூரித் தமிழாசிரியரும் இந்து ஆன்மீகப் பிரசாரகருமாகிய க. கனகதுர்க்கா நாவலர் வழி என்ற பொருளில் நினைவுப் பேருரையாற்றினார். இந்த நினைவுப் பேருரை நூலாகவும் வெளியிடப்பட்டது
தமிழ்ச்சங்கச் செயலாளர் இ.சர்வேஸ்வரா நிறைவுரையையும் நன்றியுரையையும் வழங்கினார்.
நிகழ்வில் இலங்கையில் சிறந்த சிறுவர் மன விருத்தி பாடசாலைக்கான விருதை பெற்றுக்கொண்ட
சிவபூமி பாடசாலைக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் யாழ் மாநகர பிதா சட்டத்தரணி மணிவண்ணன் அவர்களால் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”