நாட்டை விட்டு வௌியேறும் மக்கள்- உண்மையான காரணம் இதுதான்!!
வீதி அபிவிருத்தி அதிகார சபையுடன் தொடர்புள்ள மக நெகும நிர்மாண இயந்திர நிறுவனத்தினால் கட்டுகம்பொல ஆடிகமவத்தையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட அஸ்போல்ட் முழுமையான கலவை இயந்திர தொழிற்சாலையின் உற்பத்தி பணிகள் ஆளும் தரப்பு பிரதம கொறடா அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் தலைமையில் 27-11-20201 அன்று ஆரம்பிக்கப்பட்டது. .
ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக செயற்படுத்தப்பட்டு வரும் பழுதடைந்த இரும்பாக ஒதுக்கிய இயந்திரங்களை திருத்தி மீண்டும் பயன்படுத்தும் கருத்திட்டத்திற்கு ஏற்ப, நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவினால் திடீர் கள விஜயத்தின் பின்னர் வழங்கிய ஆலோசனையையடுத்து இந்த முழுமையான அஸ்போல்ட் கலவை இயந்திரம் திருத்தியமைக்கப்பட்டு உற்பத்திகள் ஆரம்பிக்கப்பட்டன.
தொழிற்சாலையின் பாகங்கள் மோசமாக பழுதடைந்ததால் சுமார் எட்டு ஆண்டுகளாக தொழிற்சாலை உற்பத்திகள் நிறுத்தப்ட்டிருந்தது. 100,000 கிலோமீட்டர் வீதி அபிவிருத்தித் திட்டம் 2020 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட நிலையில் இந்த அஸ்போல்ட் முழுமையான கலவை உற்பத்தியின் தேவை அதிகரித்தது. இந்த தொழிற்சாலையின் தேவையும் அதிகரித்தது. நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் கள விஜயத்தின் போது, இந்த இயந்திரத்தை கண்டு உடனடியாக பழுதுபார்த்து தருமாறு கேட்டுக் கொண்டார்.
அதன்படி 28 மில்லியன் ரூபா செலவில் தொழிற்சாலை புனரமைக்கப்பட்டுள்ளது. இந்த முழு தொழிற்சாலையினதும் மதிப்பு ரூ.152 மில்லியன் ஆகும். இந்த இயந்திரம் பாதை நிர்மாணிக்கத் தேவையான சுமார் 4000 மெட்ரிக் டொன் அஸ்போல்டரை மாதாந்தம் உற்பத்தி செய்கிறது. ஆண்டுக்கு 48,000 மெட்ரிக் தொன் அஸ்போல்டரை உற்பத்தி செய்கிறது. மக நெகும நிர்மாண இயந்திரக் நிறுவனத்தின் இயந்திரவியல் பிரிவின் தொழிநுட்ப உத்தியோகத்தர்களின் அர்ப்பணிப்பினாலும் உழைப்பினாலும் மிகக் குறுகிய காலத்தில் இந்த இயந்திரமும் தொழிற்சாலையும் தயார் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உரையாற்றுகையில்,
இரும்புக்காக விற்பனை செய்யப்பட இருந்த இந்த முழுமையான அஸ்போல்ட் கலவை இயந்திரத்தை நவீனமயமாக்கி பொதுமக்களிடம் கையளித்த மகநெகும தலைவர் மற்றும் ஊழியர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறேன். கணேபொல முன்கலவை பிரிவை மேற்பார்வையிடச் சென்றபோது, பழுதடைந்த முன்கலவை இயந்திரத்தை சீர்செய்து மீண்டும் பயன்படுத்த முடியுமா எனக் கேட்டதற்கு, அங்கிருந்த ஊழியர்கள் பழுதுபார்த்து மீண்டும் பயன்படுத்தலாம் என கூறினார்கள். அதற்கான பணிகளை மேற்கொள்ளுமாறு பணித்தேன். ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப்பிரகடனத்தில் , பயன்படுத்தக் கூடிய இயந்திரங்களை திருத்தி மீண்டும் பயன்படுத்துதல் ஊழலையும், வீண்விரயத்தையும் தடுத்தல் என்பன குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. ஊழலை மட்டுமன்றி வீண்விரயத்தையும் தடுக்க அவர் நடவடிக்கை எடுத்துள்ளார். ஊழல் அரசாங்கத்தின் ஊழல் தலைவர் என்று கோத்தபாய ராஜபக்சவை யாராலும் விரல் நீட்ட முடியாது. பொய் சொல்வதும் அவதூறு சொல்வதும் எளிது. அதனால்தான் அனுர திஸாநாயக்க மற்றும் சஜித் பிரேமதாச உள்ளிட்ட கும்பலின் எலும்பில்லாத நாக்கு இப்போது அவதூறு மற்றும் பொய் சொல்வதில் வளைந்துள்ளது. அவர்களின் நாக்குகள் இப்போது அவர்கள் பொய் சொல்ல விரும்பும் வழியில் வளைந்திருக்கும்.
எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து மக்கள் உயிரிழந்ததாக அண்மையில் ஒரு தேசிய நாளிதழ் செய்தி வெளியிட்டிருந்தது. ஆனால் நாங்கள் விசாரித்த போது, எரிவாயு சிலிண்டர் வெடித்து மக்கள் இறந்ததாக செய்திகளை நாங்கள் காணவில்லை. பொலன்னறுவை பிரதேசத்தில் எரிவாயு சிலிண்டர் வெடித்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தன. எவ்வாறாயினும், உயிரிழந்தவர் இறப்பதற்கு முன்னர் விபத்து தொடர்பில் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். ஊடகங்கள் இவ்விவகாரத்தை ஆராய்ந்து செய்தி வௌியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். எதிர்க்கட்சிகள் சொல்பவையெல்லாம் ஊடகங்களில் வௌிவந்தால் மக்கள் கொந்தளிப்பார்கள். நாட்டில் பெற்றோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு இருப்பதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபன தேசிய ஊழியர் சங்கத்தைச் சேர்ந்த ஆனந்த பாலித்த அண்மையில் தெரிவித்திருந்தார். அது மக்களை வரிசையில் காத்திருக்க வைத்தது. ஆனால் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படவில்லை. எமது அரசாங்கம் ஊடகங்களுடன் மோதும் அரசாங்கம் அல்ல. ஊடகங்கள் அனைத்தையும் ஆராய்ந்தே செய்தி வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
அருட்தந்தை சிரில் காமினி ,குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அழைக்கப்பட்டமை தொடர்பில் இன்று எங்கும் பேசப்படுகிறது. அவர் வழங்கிய கூற்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு அவர் அழைக்கப்பட்டிருந்தார். பொதுமக்கள் அல்லது மதகுருமார்கள் கூறும் குற்றச்சாட்டுகளை விசாரிப்பது சிஐடியின் பணியும் கடமையும் ஆகும். குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொள்ளாதிருந்தால், இந்த அறிக்கைகள் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நடவடிக்கை எடுக்கவில்லை என எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியிருக்கும். அருட்தந்தை சிறில் காமினிக்கு எதிராக சட்டம் துஷ்பிரயோகம் செய்யப்படுவதில்லை. அரசியல் கைப்பாவையாக மாற வேண்டாம் என்று அருட் தந்தைகளை கேட்டுக் கொள்கிறேன். எதிர்க்கட்சியை சேர்ந்த சதிகாரர்கள் ஏற்கனவே தேவாலயத்திற்குள் ஊடுருவிவிட்டனர்.
இந்த இரண்டு வருடங்களில் , நாட்டை திறந்து விடுங்கள், வெளிநாட்டினரை வரவழைப்போம், நாட்டின் டொலர் வருமானத்தை அதிகரிப்போம், விவசாயம் செய்வோம், பொருளாதாரத்தை உயர்த்துவோம் என்று எதிர்க்கட்சிகள் ஒருபோதும் கோரியது கிடையாது. 71ல் ஜே.ஆர்.ஜெயவர்தன எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அம்மையாருக்கு உதவுவதாகக் கூறினார். இன்றுள்ள எதிர்க்கட்சி அவ்வாறு இல்லை. வெளிநாட்டவர்கள் இலங்கைக்கு வருவதை எப்படியாவது தடுத்து நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறார்கள். தங்கள் தரப்பினரை பயன்படுத்தி விமர்சிக்க முயற்சிக்கிறார்கள். இந்த நாடு முன்னேற எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
கடந்த அரசாங்கம் இன்று இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும். பலப்படுத்தப்பட்ட பொருளாதாரத்தை முன்னைய அரசாங்கம் நாசமாக்கியது. நாட்டை அபிவிருத்தி செய்ய போதுமான பணம் இருந்தது. ஆனால் எங்களிடம் டாலர்கள் இல்லை, அதை நாங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். எமது நாட்டுக்கு அந்நியச் செலாவணியை ஈட்டித்தந்த சுமார் ஒன்றரை இலட்சம் அப்பாவிகள் மீண்டும் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டனர். அவர்களை வாக்களிக்க வரவழைத்ததாக எம்மீது குற்றம் சுமத்தினார்கள். அவர்களை அழைத்து வந்து அவர்களுக்கு தேவையான தடுப்பூசியை ஏற்றினோம். சில நாடுகளுக்கு நுழைவதற்கு ஒரே ஒரு தடுப்பூசியை மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகிறது.. நாங்கள் அதனை வழங்கினோம். வந்தவர்கள் கடவுச்சீட்டை தயார் செய்து கொண்டு வெளிநாடு சென்று விடுகின்றனர்.
ஆனால் மக்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்ற கருத்தை எதிர்க்கட்சிகள் பரப்பின. எமது கட்சி மாநாட்டில் பிரதமர் மகிந்த ராஜபக்ச இதை பற்றி ஆராயுமாறு சொன்னார். நாம் தேடிப்பார்த்த போது தடுப்பு மருந்துகளை ஏற்றிக் கொண்டு மீண்டும் வெளிநாடுகளுக்கு செல்ல வந்தவர்களே அவர்கள் என்பது தெரிந்தது. இலங்கையை விட்டு வெளியேற வேண்டுமானால் ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல வேண்டும். ஆனால் இவர்கள் ஐரோப்பாவுக்குச் செல்லும் மக்கள் அல்ல. கோட்டாபய ராஜபக்சவின் காரணமாகவே அவர் நாட்டை விட்டு வெளியேறுவதாக கூறப்படுகிறது. ஆனால் அவரால் தான் அந்த மக்கள் நாட்டிற்கு வந்தனர். ஆயிரக்கணக்கான மக்கள் வேறு நாடுகளில் இறந்த போது, அந்த நாடுகளில் வாழும் எமது மக்கள் கோத்தபாய ராஜபக்ச மீது நம்பிக்கை வைத்து அந்த நாடுகளை விட்டு வெளியேறி இங்கு வந்தார்கள். வெளிநாடு செல்லும் மனிதர்களை நாம் வணங்க வேண்டும். அவர்களிடமிருந்து வரும் டாலர்களால்தான் இந்த நாட்டிற்கு எண்ணெய் கூட இறக்குமதி செய்யப்படுகிறது. அந்த மக்களைத் தான் நாட்டை விட்டு வெளியேறுபவர்கள் என்று அவமானப்படுத்தியுள்ளனர்..
இந்த நிகழ்வில் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஆர்.டபிள்யூ.ஆர். பிரேமசிறி, மக நெகும நிர்மாண இயந்திரக் கம்பனியின் தலைவர் சமிந்த பஸ்நாயக்க, நிறைவேற்றுப் பணிப்பாளர் கே.எச்.எம்.ஷாக்கிர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.