தமிழர்களின் ஒற்றுமை முயற்சிக்கு சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும்: மாவை வேண்டுகோள்! (படங்கள், வீடியோ)
தமிழர்களின் ஒற்றுமை முயற்சிக்கு சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும்: மாவை வேண்டுகோள்! (படங்கள், வீடியோ)
தமிழ்த் தேசிய இனத்தின் அரசியல் தலைமைகளின் ஒற்றுமை முயற்சிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்த்தன் தலைமை தாங்க வேண்டும் என தமிழரசுக் கட்சியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற தமிழீழ மக்கள் கழகத்தின் பொதுச்செயலாளர் சதானந்தனின் நினைவுதின நிகழ்வில் பங்கெடுத்து உரையாற்றும் போதே இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
தமிழ் மக்கள் இன்றைக்கு மிகப்பெரிய நெருக்கடிக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். வரலாற்றில் என்றுமில்லாதவாறு நெருக்கடி மிக்க காலமாக இன்றைய நிலைமை இருக்கின்றது.
இங்கு பேசிய எல்லோருடைய பேச்சுக்களும் நாங்கள் இன்னும் சரியான இடத்திற்கு வந்து இருக்கவில்லை என்பதையும் இன்னும் தமிழ் மக்களுடைய பிரச்சினை தொடர்பாக சரியான ஒரு கோட்டிலே நாங்கள் பயணிக்கவில்லை என்பதையும் மிகமிக தெளிவாக கோடிட்டு காட்டுகின்றன.
அதற்காக நானும் பொறுப்பேற்க வேண்டி இருக்கிறது. ஏனென்றால் இந்த இனத்துக்காக மிக நீண்டகாலமாக உழைத்தவன் என்கிற ரீதியிலும் மிகப்பெரிய பாரம்பரியமுடைய கட்சி ஒன்றினது தலைவர் என்கிற ரீதியிலும் நானும் அதற்கான பொறுப்புகளை ஏற்க வேண்டியிருக்கிறேன்.
அந்த அடிப்படையில் தான் இன்றைக்கு எந்த பக்கம் திரும்பினாலும் ஒன்றுபட்ட தரப்பாக ஒற்றுமை பட்ட தரப்பாக நாங்கள் இணைந்து வேலை செய்ய வேண்டும் என்கிற விடயம் இன்று நேற்றல்ல மிக நீண்ட காலமாகவே பேசப்பட்டு கொண்டிருக்கின்றது.ஆனால் துரதிஷ்டவசமாக இந்த விடயம் இன்னும் கைகூடவில்லை.
ஆனால் அதற்காக நாங்கள் இதை கைவிட்டுவிட முடியாது இதை கைகூட வைக்கின்ற முயற்சியில் நாங்கள் ஈடுபட்டே ஆக வேண்டிய கட்டாயம் இருப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். அன்றைய நாட்களில், அதிலும் குறிப்பாக தமிழரசுக் கட்சி தமிழினத்தினுடைய தந்தை செல்வாவினுடைய தளபதியாக, தலைவர் அமிர்தலிங்கம் அவளுடைய தளபதியாக இங்கே இருக்கின்ற சித்தார்த்தனுடைய தந்தையார் தர்மலிங்கம் அவர்கள் அந்த நாட்களில் செயற்பட்டதை நான் எண்ணிப் பார்க்கிறேன்.
கட்சியிலே அல்லது கட்சிக்கு உள்ளேயோ ஒரு பிரச்சினை வருகிறது என்றாலும் சரி கட்சிக்கு வெளியிலே ஒரு பிரச்சனை ஏற்படுகிறது என்றாலும் சரி முதலில் சமாதானம் பேசுகிற ஒரு தூதராக இருந்தவர் தர்மலிங்கம் தான்.
அன்றைக்கு பெரிய தலைவர்களோடு விவாதிக்கும் விடயங்களை அவர்களோடு விவாதித்து விட்டு அதை இளைஞர்களாகிய எங்களோடு அன்றைய நாட்களிலேயே பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். அவரிடம் நாங்கள் கேள்விகளை எழுப்பும் பொழுது மிகவும் கவனமாக அதை உண்மையாக அவர் எங்களுக்கு விளக்கமளித்து இருப்பதை நான் இன்றைக்கும் நன்றியோடு எண்ணிப் பார்க்கிறேன்.
அவருடைய வழித்தோன்றலாக இங்கே இருக்கக்கூடிய சித்தார்த்தன் அவர்கள் இன்றைக்கு ஏற்பட்டிருக்கக் கூடிய நெருக்கடியான கால சூழ்நிலையில் நான் அவரிடம் வேண்டுகோளாக என்று கூட வைக்கலாம் உரிமையோடு நான் சொல்லுவேன் தமிழ் தேசிய இனத்தினுடைய நன்மை கருதி சிதறிப் போயிருக்கக் கூடிய தமிழர் தரப்புக்களை ஒற்றுமைப் படுத்த வேண்டிய தேவை கருதி அதனுடைய முக்கியத்துவம் கருதி இன்றைக்கு சகல தமிழ் தரப்புகளையும் ஒன்றிணைக்க கூடிய ஆற்றல் அவரிடம் இருப்பதாக நான் கருதுகிறேன்.
ஏனென்றால் எந்த ஒரு விடயத்தையும் நிதானமாகவும் பொறுப்பாகவும் செயற்படுத்தி எல்லோரோடும் நட்போடு பழகக் கூடிய தன்மையும் இருக்கக்கூடிய சித்தார்த்தன் ஒற்றுமை முயற்சியை தலைமை தாங்கி கொண்டு செல்ல வேண்டும் என்று நான் அவரிடம் மிகவும் வினயமாக வேண்டுகோள் விடுக்கின்றேன்.
அதை அவர் நிறைவேற்ற வேண்டும். அதுதான் அவர் தமிழினத்திற்கு செய்யக்கூடிய ஒரு மாபெரும் கடமையாக இருக்கும் என்றே நான் கருதுகிறேன் என தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
தகவல் &படங்கள்.. “புளொட்” ஊடகப் பிரிவு, யாழ். மாவடடம். & வீடியோ.. “அதிரடி” நிருபர் “கலைநிலா”