ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் சியூபர்ட் யாழ் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை சந்தித்தார்.!! (படங்கள்)
இன்றைய தினம் யாழ் மாநகரசபைக்கு விஐயம் செய்த ஜேர்மன் தூதுவர் ஹோல்கர் சியூபர்ட் யாழ் மாநகரசபை முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனை சந்தித்தார்.
இச் சந்திப்பு ஆக்கப்பூர்வமாக நடைபெற்றதாகவும், தமிழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையான சமஷ்டி அடிப்படையான தீர்வை பெற்றுக்கொள்வதற்கும், தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட இன அழிப்பு உட்பட்ட அநீதிகளுக்கு
நீதியை பெற்று கொடுப்பதற்கும் ஜேர்மன் உள்ளிட்ட சர்வதேச சமூகம் உதவ வேண்டும் என்று கோரிக்கை விடுத்ததாக முதல்வர் தெரிவித்தார்.
மனிதாபிமான மற்றும் மனித உரிமை சட்ட மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையை தாண்டி சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு அல்லது சிறப்பு தீர்ப்பாயம் ஒன்றிற்கு விடயங்கள் பாரப்படுத்தப்பட வேண்டும் என்று முதல்வர் வலியுறுத்தினார்.
மேலும் யுத்த அழிவில் இருந்து மீண்டுவரும் எமது பிராந்திய அபிவிருத்திக்கும் ஜேர்மன் உதவ வேண்டும் என்றும் யாழ் மாநகர சபைக்கும் யேர்மனின் பிரதான நகரங்களுடன் இரட்டை நகர் உடன்படிக்கை ஒன்றை மேற்கொண்டு இணைந்து செயற்படுவதற்கும் உதவ வேண்டும் என்ற கோரிக்கையும் முதல்வரால் விடுக்கப்பட்டது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”