பாகிஸ்தானில் குற்றவாளியை ஒப்படைக்க கோரி காவல் நிலையத்திற்கு தீ வைத்த கும்பல்…!!
பாகிஸ்தானின் கைபர் பாக்துன்க்வா மாகாணம் சார்சத்தா நகரில், முஸ்லிம்களின் புனித நூலான குரானை எரித்தது தொடர்பாக ஒருவரை போலீசார் கைது செய்தனர். இந்த விவகாரம் அப்பகுதி முஸ்லிம்களுக்கு தெரியவந்ததும், சுமார் 5000 பேர் ஒன்று சேர்ந்து நேற்று இரவு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். குற்றவாளியை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும், நாங்களே அவரை தண்டிப்போம் என்றும் கூறி வாக்குவாதம் செய்தனர்.
ஆனால், குற்றவாளியை ஒப்படைக்க போலீசார் மறுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த மக்கள் காவல் நிலையத்தை சூறையாடி தீ வைத்துள்ளனர். அருகில் உள்ள செக்போஸ்ட்கள் மற்றும் ஏராளமான வாகனங்களுக்கும் தீ வைத்தனர். இதனால் அப்பகுதி போர்க்களமாக காட்சியளித்தது. இன்று காலையிலும் போலீசாரின் சீருடைகளை அப்பகுதி மக்கள் தீ வைத்து கொளுத்தியதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குற்றவாளியின் பாதுகாப்பு கருதி அவரது சுய விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.
முஸ்லீம்கள் பெரும்பான்மையாக உள்ள பாகிஸ்தான் நாட்டில் மதநிந்தனை என்பது உணர்வுப்பூர்வமான பிரச்சினையாகும். சில சமயங்களில் மதநிந்தனை தொடர்பான வதந்திகள் கூட வன்முறையை தூண்டுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.