டுவிட்டர் தலைமை நிர்வாக அதிகாரி ஜேக் டோர்சி ராஜினாமா…!!!
கோடிக்கணக்கான பயனர்களைக் கொண்டுள்ள டுவிட்டர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக (சிஇஓ) பதவி வகித்தவர் ஜேக் டோர்சி. 45 வயதான டோர்சி, அவரது டிஜிட்டல் பேமெண்ட்ஸ் நிறுவனமான ஸ்கொயர் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் பணியாற்றுகிறார்.
இந்நிலையில், டுவிட்டர் தலைமை பொறுப்பில் இருந்து ஜேக் டோர்சி பதவி விலக உள்ளதாகவும், டோர்சி மற்றும் டுவிட்டர் நிர்வாகக்குழு அடுத்த சிஇஓ குறித்து முடிவு செய்துவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால், இந்த தகவல் குறித்து டுவிட்டர் தரப்பில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியிடப்படவில்லை.
ஜேக் டோர்சி நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில், “நான் டுவிட்டரை விரும்புகிறேன்” என்று பதிவிட்டிருந்தார். அவரது பதிவை 59 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
இந்நிலையில், டுவிட்டர் சிஇஓ பொறுப்பில் இருந்து விலகுவதாக ஜேக் டோர்சி இன்று அறிவித்துள்ளார். இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில், விரிவான கடிதத்தையும் பதிவு செய்துள்ளார். அவருக்கு பிறகு பராக் அக்ரவால், சிஇஓ பொறுப்பை ஏற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டே சிஇஓ பொறுப்பில் இருந்து டோர்சியை விடுவிக்க டுவிட்டர் நிறுவன பங்குதாரர் நிறுவனமான எலியட் மேனேஜ்மென்ட் முடிவு செய்தது. ஆனால், அவர்களுக்கிடையே இருந்த ஒப்பந்தம் காரணமாக, டோர்சியை நீக்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இரண்டு நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பை டோர்சி வகிப்பதை, எலியட் மேனேஜ்மென்ட் உரிமையாளர் பால் சிங்கர் எதிர்த்தார். அத்துடன், இரண்டில் ஒரு பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அதன்படி டோர்சி இன்று பதவி விலகி உள்ளார்.
டோர்சியின் ராஜினாமா குறித்த தகவல் வெளியானபின்னர் பங்குச்சந்தையில் டுவிட்டர் பங்குகள் இன்று 11 சதவீதம் உயர்ந்தது குறிப்பிடத்தக்கது.