பிட்காயினை அங்கீகரிக்க மாட்டோம் – நிர்மலா சீதாராமன் திட்டவட்ட அறிவிப்பு…!!
நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, ‘பிட்காயின்’ எனப்படும் ஆன்லைன் நாணயம் அங்கீகரிக்கப்படுமா? என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார். அவர் கூறுகையில், ‘‘பிட்காயினை பணமாக அங்கீகரிக்கும் திட்டம் இல்லை. பிட்காயின் பரிமாற்றம் குறித்த தரவுகளையும் மத்திய அரசு சேகரிக்கவில்லை’’ என்றார்.
அவர் மேலும் கூறியதாவது:-
நடப்பு நிதியாண்டின் கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம்வரை மத்திய அரசு மூலதன செலவாக ரூ.2 லட்சத்து 29 ஆயிரம் கோடி செலவிட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கலால் வரியை குறைத்துள்ளோம். விலையை குறைக்க மற்றொரு நடவடிக்கையாக, கையிருப்பில் இருந்து 50 லட்சம் பீப்பாய் கச்சா எண்ணெயை விடுவிக்க இந்தியா சம்மதித்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.