ஆங்கிலேயர்களை போல பாஜக மக்களை பிரித்தாளுகிறது: பூபேஷ் பாகல் குற்றச்சாட்டு…!!
மகாத்மா ஜோதிராவ் புலேயின் நினைவு தினத்தை முன்னிட்டு புனேயில் காங்கிரஸ் கட்சி ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் சத்தீஷ்கார் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் கலந்துகொண்டார்.
நிகழ்ச்சியில் அவருக்கு “மகாத்மா புலே சமதா புரஸ்கார்” விருது வழங்கப்பட்டது.
இந்த விழாவில் முதல்-மந்திரி பூபேஷ் பாகல் பேசியதாவது:-
மக்கள் பிரச்சினைகளுக்காக காங்கிரஸ் கட்சி எப்போதும் போராடி வருகிறது. தற்போது உள்ள மத்திய பா.ஜனதா தலைமையிலான அரசு போல் இல்லாமல் காங்கிரஸ் கட்சி மக்களுக்கு பல உரிமைகளை வழங்கியது.
சுதந்திரம், அரசியலமைப்பு, பஞ்சாயத்து ராஜ் அமைப்பு, தகவல் அறியும் உரிமை சட்டம் மற்றும் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு உரிமைகளை வழங்கியது. மேலும் காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீட்டையும் வழங்கியது. ஆனாலும் கடந்த 70 ஆண்டுகளில் காங்கிரஸ் என்ன செய்தது என்று அவர்கள் தொடர்ந்து கேள்வி எழுப்புகிறார்கள்.
காங்கிரஸ் பல ஆண்டுகளாக கட்டியெழுப்பியதை அவர்களிடம் சொல்ல வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இல்லையெனில் மோடி அரசு அவற்றையும் விற்றுவிடும்.
ஆங்கிலேய ஆட்சியாளர்களை போல நம்மை பிரித்தாளும் தந்திரத்தை அவர்கள் விளையாடுகிறார்கள். அவர்கள் இந்துக்களையும், முஸ்லிம்களையும் தங்களுக்குள் சண்டையிட ஊக்குவிக்கிறார்கள். முதலில் நாம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடினோம்.
இப்போது திருடர்களை எதிர்த்து போராடிக்கொண்டு இருக்கிறோம்.
காங்கிரஸ் கட்சிக்கு என்று ஒரு வரலாறு உள்ளது. அதன் வரலாற்றை தொண்டர்களாகிய நீங்கள் அறிந்துகொள்ளுங்கள். அதன்மூலம் வேறு எந்த எதிர்க்கட்சியும் அதை திரித்து கூற முடியாது. நீங்கள் அவர்களுக்கு பதில் சொல்லலாம்.
விலைவாசி உயர்வு உள்ளிட்ட மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை முன்னிலைப்படுத்துங்கள், புதிய உறுப்பினர்களை இணைத்து கட்சியின் அடித்தளத்தை மேலும் வலுப்படுத்துங்கள் என நான் தொண்டர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.