;
Athirady Tamil News

டிசம்பர் 15-ந்தேதி வரை கொரோனா கட்டுப்பாடுகள் நீட்டிப்பு: முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு..!!

0

தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கொரோனா தொற்று கட்டுப்பாடுகளை நீட்டிப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த நிலையில் தற்போது நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளர்.

அதன் விவரம் வருமாறு:-

தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், அரசு ஆணை. எண். 753, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, நாள் 18.11.2021-ன்படி, 30.11.2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது.

ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தால் 30.11.2021 நாளிட்ட கடிதத்தில் கொரொனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் 31.12.2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா நோய்த்தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டிய அவசியம் கருதியும், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து, தொடர்மழை பொழிந்து வருகின்ற சூழ்நிலையை கருத்தில் கொண்டும், பொதுமக்கள் நலன் கருதி நடைமுறையில் உள்ள ஊரடங்கு கட்டுப்பாடுகள் 15-12-2021 வரை நீட்டித்து உத்தரவிடப்படுகிறது.

ஏற்கனவே ஆந்திரபிரதேசம், கர்நாடகா மாநிலங்களுக்கிடையே பொது போக்குவரத்து அனுமதிக்கப்பட்டுள்ளதை போன்று கேரள மாநிலத்திற்கும் பொது போக்குவரத்து அனுமதிக்கப்படுகிறது.

பொது

செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து கடைகள் மற்றும் பொது மக்கள் கூடக்கூடிய இடங்களில் கீழ்க்கண்ட நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்ற வேண்டும்.

கடைகளின் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் (hand sanitizer with dispenser) கட்டாயமாக வைக்கப்படுவதோடு, உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் (thermal screening).

கடைகளில் பணிபுரிபவர்களும், வாடிக்கையாளர்களும் கட்டாயம் முகக்கவசம் அணிவதை சம்மந்தப்பட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும்.

கடைகளில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது.

கடைகளின் நுழைவு வாயிலில் பொது மக்கள் வரிசையில் காத்திருக்கும் போது, ஒரு நபருக்கும் மற்றொருவருக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்கும் வகையில் குறியீடுகள் போடப்பட வேண்டும்.

நோய்த் தொற்று கட்டுப்படுத்துவதற்கான வழிமுறைகள்

நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களை கடண்டறிதல், நோய்த் தொற்றுக்குள்ளானவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிதல், சிகிச்சை அளித்தல், தடுப்பூசி செலுத்துதல் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுதல் (Test-Track-Treat-Vaccination-Covid-19 Appropriate Behaviour) ஆகிய கோட்பாடுகளை கண்டிப்பாக நடைமுறைப்படுத்தப்படும்.

கொரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலைத் தடுப்பதற்கு, நோய்த் தொற்று பாதிப்பிற்குள்ளானவர்கள் உள்ள பகுதிகளில், நோய்க் கட்டுப்பாட்டு மண்டல எல்லைகளை நுண்ணளவு வரை (Micro Level) வரையறை செய்து, நிலையான வழிகாட்டு நடைமுறைகளின்படி, தீவிரமாக நோய்த் தடுப்பு நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

வரையறுக்கப்பட்ட நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில், கீழ்க்கண்ட நோய்க் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் கண்டிப்பாக பின்பற்றப்பட வேண்டும்.

நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் அத்தியாவசிய செயல்பாடுகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட வேண்டும். இந்த நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், மருத்துவ அவசர சேவைகள் மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் வழங்குதல் தவிர, இதர செயல்பாடுகள் அனுமதி இல்லை.

கோப்புப்படம்

நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில், தீவிரமாக நோய்த் தொற்று பரவலை, வீடு வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்படும்.

கொரோனா நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்த, பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

கொரோனா நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்ள தவறாமல் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு கேட்டு கொள்கிறேன்.
மேலும், தடுப்பூசி செலுத்திக் கொண்டாலும் கூட, கொரோனா மேலாண்மைக்கான தேசிய வழிகாட்டு நடைமுறைகளில் குறிப்பிட்டுள்ளபடி, பொது இடங்களில் முகக் கவசம் அணிவது, சமூக இடைவெளியினை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சோப்பு / கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்வது ஆகியவற்றை கட்டாயம் பின்பற்றவும், நோய்த்தொற்று அறிகுறிகள் தென்பட்டவுடன், பொதுமக்கள் உடனே அருகிலுள்ள மருத்துவமனைகளை நாடி மருத்துவ ஆலோசனை/ சிகிச்சை பெறவும் கேட்டுக்கொள்கிறேன்.

மக்கள் அனைவரும் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்கி கொரோனா தொற்றினை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.