நாட்டை மீண்டும் முடக்கும் எண்ணம் அரசாங்கத்திற்கு இல்லை!!
நாட்டை மீண்டும் முடக்குவது தொடர்பில் அரசாங்கத்திற்கு எந்தவித எதிர்பார்ப்பும் இல்லை.
எதிர்வரும் நத்தார் பண்டிகை காலத்தில் நாட்டை முடக்குவது தொடர்பில் உத்தியோகபூர்வமான கலந்துரையாடல்கள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்று அமைச்சரவை இணைப் பேச்சாளர் அமைச்சர் ரமேஷ பத்திரன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
நாட்டில் மிகவும் வெற்றிகரமான தடுப்பூசித் திட்டத்தை அரசாங்கம் மிகவும் சிரமத்துடன் அமுல்படுத்தியது. அதன் பின்னர் நாடு திறக்கப்பட்டாலும் நாட்டில் இந்நோய் முற்றாகக் கட்டுப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும், நாட்டில் பெரும்பாலான மக்கள் முழுமையாக தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ளனர். சிறு வயதினர்களளுக்கு கூட தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது. இதனூடாக நாம் யாரும் பாதுகாப்பாக உள்ளோம் என்று அர்த்தம் கொள்ளக் கூடாது என்றும் அவர் கூறினார்.
அத்துடன், எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் மக்கள் தமது பாதுகாப்பிற்கு பொறுப்பாக இருக்க வேண்டும். தமது பிள்ளைகள் மற்றும் குடும்பங்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தி, சுகாதாரத் துறையினரால் மீண்டும் மீண்டும் வலியுறுத்தும் சுகாதாரப் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றி, முகக் கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பேணி செயற்படுமாறும் அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை, மூன்றாவது டோஸ் தடுப்பூசியை வழங்க அரசாங்கம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. ஆனால் அண்மையில் பதிவாகிய ஒமிக்ரோன் வைரஸ் திரிபினால் உலகில் ஆபத்தான சூழ்நிலையொன்று மீண்டும் உருவாகி வருவதாகவும் அவர் கூறினார்.
இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ளாதவர்கள் காலம் தாழ்த்தாது, விரைவில் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுங்கள். மக்களின் ஆரோக்கியம் மற்றும் நாட்டின் பொருளாதார பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு ஆகியவை நம் அனைவரின் விவேகமான மற்றும் பாதுகாப்பான நடத்தையில் தங்கியுள்ளது என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.