;
Athirady Tamil News

ஒற்றைக் குழந்தையின் பெற்றோர் கவனத்துக்கு…!! (மருத்துவம்)

0

மாறி வரும் சமூக சூழலில் ஒரு குழந்தை போதும் என்ற நிலைக்குப் பலரும் வந்துவிட்டார்கள். பெண்ணோ, ஆணோ ஒன்றே போதும் என்ற மனநிலை பெரும்பாலான குடும்பங்களில் நிலவுகிறது. அப்படி ஒரு குழந்தை போதும் என்று முடிவெடுக்கும் பெற்றோர் குழந்தையின் வளர்ப்பில் கவனம் செலுத்த வேண்டிய விஷயங்கள் என்ன?
– உளவியல் ஆலோசகர் நேத்ராவுக்கு இந்த கேள்வி.

‘‘உளவியலில் Birth order என்ற தியரி உள்ளது. அதாவது, குழந்தையின் பிறப்பு வரிசை அடிப்படையில், சில தனிப்பட்ட நடத்தைகள் அதனிடம் காணப்படும். முதல் குழந்தை என்றால், கல்வியில் சிறந்து விளங்கும்.

பெற்றோரை மதித்தல், பொறுப்புணர்வு, தியாக மனப்பான்மை, செயலாற்றல் திறன் போன்ற குணநலன்கள் அதனிடம் காணப்படும். அதுவே, கடைசி குழந்தையாக இருந்துவிட்டால் கேள்வி கேட்கும் திறன், சூழலுக்கு ஏற்றவாறு வளைந்து கொடுக்கும் தன்மை, போட்டி மனப்பான்மை ஆகிய பண்புகளைக் கொண்டு இருக்கும்.

ஒரு குழந்தை மட்டுமே உள்ள குடும்பத்தில், அந்தக் குழந்தைதான் முதல் மற்றும் கடைசி குழந்தையாக இருக்கும். அதுபோன்ற நிலையில், பர்த் ஆர்டர் தியரியில் சொல்லப்பட்ட முதல் மற்றும் கடைசி குழந்தையிடம் உள்ள மாறுபட்ட குணங்கள் அனைத்தும் இதனிடம் காணப்படும்.

அக்கா, தம்பி என உடன்பிறந்தவர்களுடன் வாழும் குழந்தைகளைவிட, வீட்டில் ஒற்றைக் குழந்தையாக வளர்கிறவர்களுக்கு எண்ணங்களை, உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வதற்கான வாய்ப்புகள் குறைவு. கூட்டுக்குடும்பத்தில் வாழும் சிங்கிள் சைல்டின் நிலை வேறு.

மற்ற சகோதர உறவுகளுடன் இணைந்து வாழ்வதால் சிங்கிள் சைல்ட் என்று நினைக்க வேண்டியதில்லை. அதுவே, மற்றவர்களுடன் தன்னுடைய உணர்வுகளையும், உடமைகளையும் கூட்டுக்குடும்பத்தில் வாழும் சிங்கிள் சைல்ட் பகிர்ந்துகொள்ளப் பழகியிருக்கும். ஆனால், தனிக்குடும்பத்தில் வாழும் சிங்கிள் சைல்ட் அம்மா, அப்பா என அதன் உடமைகள் எதையும் பகிரவேண்டிய அவசியம் இருக்காது.

எனவே, அக்குழந்தை பள்ளியிலோ, வெளியிடங்களிலோ பகிர வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. எனவே, அந்த குழந்தை மிகவும் கஷ்டப்பட வேண்டியிருக்கும். அதனால், மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ள பெற்றோர் கற்றுக்கொடுக்க வேண்டும்.

2, 3 வயதில், பெற்றோர், குழந்தை பராமரிப்பாளர் ஆகியோருடன் இதனுடைய கலந்துரையாடுதல் குறைவாகக் காணப்படும். தனியாக வளரும் குழந்தைகளுக்குத்தான் உதவி தேவைப்படும். எனவே பெற்றோர் மற்ற குழந்தைகளுடன் விளையாடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும்.

ஒரே குழந்தை என்ற அக்கறையில் டான்ஸ், பாட்டு என பல்வேறு பயிற்சி வகுப்புகளில் சேர்த்துவிடுவதில் தவறு இல்லை. ஆனால், குழந்தைக்குத் தேவையற்ற அழுத்தம் தரக்கூடாது. அதற்குப் பதிலாக அதனுடன் கலந்துரையாட வேண்டும். அந்தந்த வயதுக்கு என்னென்ன தேவையோ, அதை பெற்றோர் முழுமையாக குழந்தைக்கு கிடைக்க செய்ய வேண்டும். உதாரணத்துக்கு 4 வயது என்றால், தினமும் மாலை வேளையில் ஒரு மணிநேரமாவது விளையாடும் சூழலை ஏற்படுத்தித் தருவது அவசியம்.

5 வயதுக்குத் தேவையானதை கொடுக்காமல், எதிர்காலத்துக்குத் தேவைப்படுவதைத் திணிக்கக் கூடாது. ஒற்றைக் குழந்தையின் வளர்ப்பில் ஆசிரியர்களின் பங்கு முக்கியமானது. முதலில், மற்ற மாணவர்களிலிருந்து அந்த குழந்தையை அடையாளம் காண வேண்டும். வீட்டில் அந்த குழந்தைக்கு பலரின் கவனிப்பு கிடைத்திருக்கும். அதையே பள்ளியிலும் அந்தக்குழந்தை எதிர்பார்க்கலாம். எனவே, ஒற்றைக் குழந்தைக்கு அதிக கண்காணிப்பு தேவை. ஊக்குவித்தல் அவசியம். எந்த சூழ்நிலையிலும் ஆசிரியர் குழந்தையை சங்கடப்பட வைக்கக் கூடாது.

‘ஒரு குழந்தை போதும்’ என முடிவெடுக்கும் பெற்றோர் அக்குழந்தையை மிகவும் கண்டிப்பாக வளர்ப்பார்கள். இது தவறு. இதனால் சமூகத்தில் சேர்ந்து வாழமுடியாமல் அந்தக் குழந்தை எதிர்காலத்தில் கஷ்டப்பட நேரிடும்.

ஒன்றுவிட்ட சகோதர சகோதரிகளுடன் பகைமை உணர்வுடனும் வளர்வார்கள். தற்போது Sibling bullying என்ற பாதிப்புடன் இருப்பதை அதிகளவில் கேள்விப்படுகிறேன். அதாவது இந்தக் குழந்தைகள் உறவினர்களைக் கொடுமைப்படுத்தும் மனப்பான்மையுடனும் காணப்படுவார்கள்’’ என்பவர், ஒற்றைக் குழந்தையின் பெற்றோர் கடைப்பிடிக்க வேண்டிய வழிமுறைகளைக் கூறுகிறார்.

‘‘பாட்டி, தாத்தா, பெற்றோர் என யாராக இருந்தாலும், நான்தான் அக்குழந்தைக்கு எல்லாமே என்று கருதக்கூடாது. மற்றவர்களுடன் கலந்து உறவாடும் செயல்களில் ஈடுபடுத்த வேண்டும். சமூகம் சார்ந்த திறமைகளை வளர்த்துக்கொள்வதற்கான வாய்ப்புக்களை உருவாக்கித் தர வேண்டும். பள்ளியில் நடந்தவை பற்றி மனம் விட்டுப் பேச வேண்டும்.

பள்ளியில் சிறப்பாக செயல்பட்டு இருந்தால், அதற்காக பரிசளித்து ஊக்கப்படுத்தலாம். பாலியல் தொடர்பான கேள்விகளுக்கு மழுப்பாமல், சங்கடப்படாமல் அது புரிந்து கொள்ளும் வகையில் பதில் சொல்வதும் அவசியம். குழு விளையாட்டுக்களில் சேர்த்துவிட வேண்டும். இதன்மூலம் பிறரிடம் பழகும் அக்குழந்தையின் போக்கில் நிறைய நல்ல மாற்றத்தைக் காண முடியும்’’ என்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.