இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை – சுகாதாரத்துறை மந்திரி..!!
போட்ஸ்வானா, தென் ஆப்பிரிக்காவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட ஒமிக்ரான் வைரஸ் தொற்று மிகவும் வீரியமானது. இந்த வைரசை கவலைக்குரிய தொற்றுப் பட்டியலில் சேர்த்துள்ளது உலக சுகாதார அமைப்பு.
இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பிரேசில், வங்காளதேசம், போட்ஸ்வானா, மொரீஷியஸ், சீனா, நியூசிலாந்து, ஜிம்பாப்வே, சிங்கப்பூர், ஹாங்காங், இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இந்த வைரஸ் பரவியுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதாரத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின் போது பேசிய அவர், இந்தியாவில் இதுவரை ஒமிக்ரான் வகை கொரோனா பாதிப்பு கண்டறியப்படவில்லை. ஒமிக்ரான் வைரசை எதிர்த்துப் போராட அனைத்து நிலைகளிலும் தயாராக உள்ளோம். ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவிற்குள் ஊடுருவாமல் இருக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன என தெரிவித்தார்.