யுபிடெட் கேள்வித்தாள் கசிவு விவகாரம்: தேர்வு ஒழுங்குமுறை ஆணைய செயலாளர் இடைநீக்கம்…!!!
உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த ஞாயிற்றக்கிழமை அன்று நடைபெற இருந்த ஆசிரியர் தகுதித் தேர்வு (யுபிடெட்) கேள்வித்தாள் கசிந்ததால் உடனடியாக ரத்து செய்யப்பட்டது.
மாநிலம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மையங்களில், காலை 10 மணிக்கு தேர்வு தொடங்க இருந்த நிலையில், வாட்ஸ்அப்பில் கேள்வித்தாள் கசிந்தது தெரியவந்தது. இதையடுத்து, உடனடியாக தேர்வை ரத்து செய்து அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, இந்த விவகாரத்தில் தொடர்புடைய சுமார் 29 பேரை அம்மாநில சிறப்பு அதிரடிப்படை அதிகாரிகள் அதிரடியாக கைது செய்தனர். மேலும், 20க்கும் மேற்பட்டோரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கேள்வித்தாள் கசிவு விவகாரத்தில் உத்தரபிரதேச மாநில தேர்வு ஒழுங்குமுறை ஆணைய செயலாளர் சஞ்சய் குமார் உபாத்யாய் என்பவரை இடைநீக்கம் செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து அடிப்படைக் கல்விச் செயலர் அனாமிகா சிங் வெளியிட்டுள்ள இடைநீக்க உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாவது:-
ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதற்கும், நடந்த தவறுகளுக்கும் சஞ்சய் குமார் உபாத்யாய் பொறுப்பேற்பார். தேர்வின் புனிதத்தன்மையையும், உயர்தர ரகசியத் தன்மையையும் கடைப்பிடிக்கத் தவறியதாக உபாத்யாய் முதன்மை குற்றவாளியாக கருதி நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கேள்வித்தாள் கசிவு காரணமாக தேர்வு ரத்து செய்யப்பட்டிருப்பது மாநில அரசுக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் மாநில ஆளுநர் ஆனந்திபென் படேலின் ஒப்புதலுடன் சஞ்சய் குமார் உபாத்யாய் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.