;
Athirady Tamil News

முஸ்லீம் – தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து பயணிக்க வேண்டும்!!

0

சிறுபான்மை மக்களாகிய முஸ்லீம் – தமிழ் மக்கள் எதிர்காலத்தில் ஒன்று சேர்ந்து அரசியல் என்ற பயணத்தில் பயணிக்க வேண்டிய தேவை இருப்பதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் அட்டாளைச்சேனையில் இன்று (01) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் கலந்து கொண்டு மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், அம்பாறை மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கின்றேன். எனக்கு சுமார் 27 ஆயிரம் வாக்குகளை கடந்த தேர்தலில் அளித்திருந்தும் பாராளுமன்றம் செல்லாவிட்டாலும் கூட குறிப்பாக அரசினால் மேற்கொள்ளப்படுகின்ற தீர்மானங்கள் சிறுபான்மை மக்களாகிய முஸ்லீம் மக்களுக்கு பாதகமாக இருக்கின்ற சந்தர்ப்பத்தில் நாம் மௌனமாக இருக்க முடியாது. இருந்த போதிலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் முஸ்லீம் சமூகத்தின் பல விடயங்கள் இன்று இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் குறித்த ஆட்சி நிலையில்லாததன் காரணமாக முஸ்லீம்களின் காணி பிரச்சினைகள் ஏனைய பல்வேறுபட்ட பிரச்சினைகள் உள்ள நிலையில் இந்த அரசில் என்னால் எதுவும் செய்ய முடியவில்லை என்ற கவலையும் என்னுள் இருக்கின்றது.

குறிப்பாக அண்மையில் எமது ஜனாதிபதி ஒரு நாடு ஒரு சட்டம் என்ற அடிப்படையில் ஜனாதிபதி செயலணி ஒன்றினை அமைத்துள்ளார். இந்த செயலணிக்கு தலைவராக பொதுபல சேனா அமைப்பின் செயலாளராக இருக்கின்ற கலகொட அத்தே ஞானசார தேரரை நியமித்திருக்கின்றார்.

இந்நியமனமானது தமிழ் முஸ்லீம் மக்களிற்கு பாதிப்பான விடயமாக அமைவதுடன் இதனை நாம் வன்மையாக கண்டிக்கின்றோம். இந்த நியமனத்தை இல்லாமல் செய்வதே எமது சிறுபான்மை சமூகத்திற்கு ஜனாதிபதி செய்யும் பேருதவியாகும். பாராளுமன்றத்திலும் கூட எமது பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்விடயம் குறித்து உரையாற்றி இருந்த போதிலும் இதனை அவர்கள் இதுவரை பொருட்படுத்தவில்லை என்பது வேதனை தருகின்றது.

இதை தவிர ஜனாதிபதி பிரதமர் இந்த அரசாங்கம் அமைச்சரவை கூட்டத்திலும் தன்னிச்சையாக எடுக்கின்ற தீர்மானங்களும் சிறுபான்மை மக்களுக்கு பெரும்பாலும் இழப்புகளையே ஏற்படுத்துகின்றன என்ற நிலைப்பாட்டில் தான் உள்ளதை நாம் அறிவோம்.

இந்நாட்டின் ஜனாதிபதி எந்தவொரு தீர்மானங்களை மேற்கொண்டாலோ இந்த நாட்டின் பிரஜை என்ற அடிப்படையில் எமது பாராளுமன்ற உறுப்பினர்களையும் ஒன்றினைத்து முடிவெடுத்து சட்டங்களை அமுல்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இவ்வாறான நிலையில் சிறுபான்மை மக்களாகிய முஸ்லீம் தமிழ் மக்கள் எதிர்காலத்தில் ஒன்று சேர்ந்து அரசியல் என்ற பயணத்தில் பயணிக்க வேண்டிய தேவை இருக்கின்றது. ஏனெனில் இரு சமூகமும் ஒன்று சேரும் போது தான் இந்த அரசிற்கும் பிறகு வருகின்ற அரசிற்கும் அழுத்தம் கொடுக்கப்பட்டு சிறுபான்மையினரின் சமவுரிமைகளை பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.