எரிவாயு கலவை குறித்து லிட்ரோ விளக்கமளிப்பு!
எரிவாயு கசிவு மற்றும் வெடிப்புகளுக்கு எரிவாயு கலவையில் ஏற்பட்ட மாற்றமே காரணம் என்று சில தரப்பினர் கருத்து தெரிவித்தாலும், லிட்ரோ தனது நிறுவனம் எரிவாயு கலவையில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளவில்லை என சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலைமை தொடர்பில் இன்று (01) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு கருத்து வெளியிட்டனர்.
தற்போது சந்தையில் கிடைக்கும் சிலிண்டர்களில் எரிவாயு கலவை மாற்றப்படவில்லை என அவர்கள் இதன்போது தெரிவித்தனர்.
லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தொழிற்சாலை முகாமையாளர் இந்திரசிறி விஜேரத்ன கருத்து தெரிவிக்கையில்,
“கடந்த ஏப்ரல் மாதம் 18 லீட்டர் சிலிண்டர் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில் எரிவாயு கலவையில் மாற்றத்துடன் நுகர்வோருக்கு வெளியிடப்பட்டது. புதிய தலைவர் ஜூலை 28ஆம் தேதி பதவியேற்ற பிறகு, அந்த 18 லிட்டர் சிலிண்டர்களின் உற்பத்தி முற்றிலும் நிறுத்தப்பட்டது. ஏப்ரலில் சந்தைக்கு விநியோகித்த போது எரிவாயு கலவை 50 க்கு 50 ஆக இருந்தது.“ என்றார்.