குடும்பமே இல்லாதவருக்கு குடிமகனின் வலி எப்படி புரியும்? -யோகியை கடுமையாக சாடிய அகிலேஷ்…!!
உத்தர பிரதேச மாநிலம் பண்டாவில் சமாஜ்வாடி கட்சியின் விஜய் ரத யாத்திரையில் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் பேசிய அவர், உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத்தை கடுமையாக விமர்சித்துள்ளார்.
இதுதொடர்பாக அகிலேஷ் யாதவ் பேசுகையில், “எங்களுக்கு குடும்பம் உள்ளது. அதனால், குடும்பத்தில் உள்ள தொழிலாளர்களோ, விவசாயிகளோ உயிரிழந்தால் அதன் வலி எங்களுக்கு புரியும். குடும்பமே இல்லாதவருக்கு அவர்களின் வலி எப்படி புரியும்? இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்குவதாக உத்தரவாதம் அளித்த யோகி, தற்போது நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களின் கனவுகளைத்தான் கொன்றுள்ளார். இதில், இளைஞர்களுக்கு டேப் மற்றும் ஸ்மார்ட்போன்களை வழங்குவதாக வேறு கூறியிருக்கிறார். கோரக்நாத் கோயிலின் தலைமை பூசாரியான யோகி ஆதித்யநாத்துக்கு லேப்டாப், செல்போன் ஆகியவற்றையாவது உபயோகிக்கத் தெரியுமா?” என கேள்வி எழுப்பினார்.
உத்திர பிரதேச மாநில ஆசிரியர் தகுதித் தேர்வு வினாத்தாள் வெளியீடு தொடர்பாக பேசிய அகிலேஷ் யாதவ், வேண்டுமென்றே யோகியின் அரசு வினாத்தாளை கசிய விட்டுள்ளதாக குற்றம்சாட்டினார்.
சமாஜ்வாதி கட்சி ஆட்சிக்கு வந்தால், அடிப்படை ஆசிரியர்கள் பயிற்சி மற்றும் இளங்கலை கல்வி சான்றிதழ் பெற்றவர்களை வேலைக்கு அமர்த்துவோம் என்றும் அவர் உறுதியளித்தார்.
கொரோனா தொற்றின் உச்சக்கட்ட காலத்தில் உத்தர பிரதேச மக்களை அநாதைகளாக விட்ட தகுதியில்லாத அரசு என்று சாடிய அகிலேஷ், வெறும் போலி விளம்பரங்கள் மற்றும் பொய் விளம்பரங்களால் மட்டுமே யோகி அரசு காணப்படுவதாக விமர்சித்தார்.
பொய்களை பரப்ப விரும்புபவர்களுக்கு வழிகாட்டும் வகையில் யோகி அரசின் விளம்பரங்கள் இருப்பதாக அகிலேஷ் கிண்டலடித்தார். தனது தலைமையிலான அரசு அமைந்தால், தாய்மார்களுக்கும், சகோதரிகளுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையில் புதிய திட்டங்கள் மற்றும் செயல்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அகிலேஷ் யாதவ் உறுதியளித்தார்.