;
Athirady Tamil News

டிசம்பர் 6 தொடக்கம் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் – யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன்!! (வீடியோ)

0

யாழ். மாவட்டத்தில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ள நிலையில் டிசம்பர் 6 தொடக்கம் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் க.மகேசன் தெரிவித்தார்.

இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் மழை உடனான காலநிலையின் பிற்பாடு டெங்கு பரவும் அபாயம் அதிகரித்துக் காணப்படுகின்றது கடந்த வருடத்தைவிட இந்த வருடத்தில் கடந்த வாரம் வரை டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்த நிலை காணப்படுகின்றது.

கடந்த வாரம் வரை 133 நபர்களுக்கு டெங்கு நோய் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

டெங்கு அதிகமாக செப்டம்பர், அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிகரித்து காணப்படுகின்றது.

அதன் அடிப்படையிலேயே சுகாதார விழிப்புணர்வு குழுக் கூட்டத்தில் கொரோனா, டெங்கு தொடர்பில் ஆராய்ந்து இருந்தோம்.

அதற்கிணங்க டெங்கு கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து இருக்கின்றோம். அதன் பிரகாரம் எதிர்வரும் டிசம்பர் 6ஆம் திகதி தொடக்கம் ஒரு வாரத்தினை நுளம்பு கட்டுப்பாட்டு வாரமாக பிரகடனப்படுத்தி அந்த வாரம் யாழ்ப்பாண குடாநாடு பூராகவும் அனைத்து பங்குதாரர்களுடனும் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கையினை மேற்கொள்ள இருக்கிறோம்

அதனடிப்படையில் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலும் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு செயலணி கூட்டத்தை நடாத்தி அதனடிப்படையில் ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவு ரீதியாகவும் தங்களுடைய பிரதேசத்தில் டெங்கு கட்டுப்பாட்டினெ மேற்கொள்ள கூடிய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் என கோரி இருக்கின்றோம்.

ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் உள்ள உள்ளுராட்சி மன்றத்தினர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரியினர் மற்றும் ஏனைய அதிகாரிகளுடன் இணைந்து இந்த டெங்கு ஒழிப்பு வாரத்தினை செயற்படுத்துவதற்கு தீர்மானித்திருக்கின்றோம்.

யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிவாயு அடுப்புகள் வெடித்து சிதறிய சம்பவங்கள் இன்று வரை மூன்று பதிவு செய்யப்பட்டுள்ளன. முதலில் கந்தரோடை அதன் பின்னர் வட்டுக்கோட்டை மற்றும் அராலி பகுதிகளில் இந்த சம்பவங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

நாங்கள் இந்த நிலைமை குறித்து ஆராய்ந்து கடந்த வார இறுதியில் பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையின் ஊடாக குறித்த நிலைமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரியிருந்தேன்.

அவர்கள் விசாரணை மேற்கொண்ட போது பாவனையாளர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைமைப்பீடம் இந்த விடயங்களை அதாவது எரிவாயு அடுப்பு வெடித்தல் சம்பவங்களை அப் பிரதேச பொலிஸ் நிலையங்களின் ஊடாக விசாரணை செய்து அதனை சமர்ப்பிக்குமாறு அறிவித்துள்ளார்கள். எனவே எமது பாவனையாளர் அதிகார சபையினர் யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிவாயு அடுப்பு வெடித்தல் இடம்பெற்ற பிரதேசங்களில் உள்ள பொலிஸ் நிலையங்கள் ஊடாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அந்த அறிக்கையின் ஊடாக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

குறிப்பாக இந்த விடயமானது தேசிய மட்டத்தில் இடம்பெற்றுவரும் ஒரு சம்பவமாகும். எனவே இந்த விடயம் தொடர்பில் பாவனையாளர்கள் எச்சரிக்கையாக இந்த விடயத்தை கையாள வேண்டும் குறிப்பாக புதிதாக எரிவாயு சிலிண்டர்களை பெற்றவர்களிடமிருந்தே இந்த முறைப்பாடு அதிகம் கிடைக்கப் பெற்றுள்ளது என்றார்.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.