கரிப்பூர் விமான நிலையத்தில் டிராலியில் கடத்தி வந்த 3.9 கிலோ தங்கம் பறிமுதல்…!!
வளைகுடா நாடுகளில் இருந்து கேரளாவுக்கு வரும் விமானங்களில் தங்கம் கடத்தலை தடுக்க சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்நிலையில் மலப்புரம், கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஜெட்டாவில் இருந்து ஒரு விமானம் வந்தது. இதில் வந்த 2 பயணிகள் மீது சுங்க இலாகா அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.
இதையடுத்து அந்த பயணிகள் கொண்டு வந்த உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். பின்னர் அவர்களின் பொருள்கள் வைக்கப்பட்டிருந்த டிராலியை சோதனை செய்தபோது அதில் 3.9 கிலோ தங்கம் மறைத்து வைத்திருந்தது தெரிய வந்தது.
அவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் 2 பயணிகளையும் பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். கைப்பற்றப்பட்ட தங்கத்தின் மதிப்பு ரூ.2 கோடி என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.