20 வயதிற்கும் 60 வயதிற்கும் மேற்பட்டோருக்கு 3வது தடுப்பூசி!!
கொரோனா வைரஸ் (கொவிட் 19) தடுப்பூசி வழங்கல் திட்டத்தின் கீழ் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் அதிக ஆபத்துள்ள நோய் நிலைமையுடைய 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மேலதிகமாக 3 வது தடவையாக (Pfizer) கொவிட்-19 தடுப்பூசியானது 22.11.2021 ஆம் திகதி முதலும் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 29.11.2021 ஆம் திகதி முதலும் வழங்கப்பட்டுவருகின்றன.
எனினும் வருந்தத்தக்க வகையில் இவ் மேலதிக தடுப்பூசியினை பெற்றுக்கொள்வதில் மக்களிடையே ஆர்வம் குறைவாகவே காணப்படுகின்றமையினை அவதானிக்க முடிகின்றது.
வடமாகாணத்தில் ஏற்பட்டுள்ள இறப்புக்களை ஆராயும்போது வயது முதிர்ந்தவர்கள் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களின் எண்ணிக்கையே அதிகமாக காணப்படுகின்றது. தடுப்பூசி ஏற்றிக்கொள்வதன் மூலம் மட்டுமே கொவிட் தொற்று ஏற்பட்டாலும் அதன் தாக்கத்தையும் அதன்மூலம் ஏற்படும் இறப்புக்களையும் குறைக்கக்கூடியதாக இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்கள் மற்றும் அதிக ஆபத்துள்ள நோய் நிலைமையுடைய 20 வயதிற்கு மேற்பட்டவர்கள் 2வது தடுப்பூசியைப் பெற்று ஆகக் குறைந்தது ஒரு மாத இடைவெளியின் பின்னரும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் மூன்று மாத இடைவெளியின் பின்னரும் இத் தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளலாம்.
எனவே, மேற்குறிப்பிட்டவர்களில் சினோபாம் கொவிட்-19 தடுப்பூசியை 2 தடவைகள் பெற்றுக் கொண்டவர்கள் மட்டுமே தமது தடுப்பூசி அட்டையினை சமர்ப்பித்து தமக்குரிய 3 வது தடுப்பூசியினை (Pfizer) பெற்றுக்கொள்ள முடியும்.
அவ்வகையில் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் அந்தந்த பிரதேசங்களிற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தவர்களுக்கும் அதிக ஆபத்துள்ள நோய் நிலைமையுடைய 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் மற்றும் தடுப்பூசி அல்லது வேறுமருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கும் எதிர்வரும் மார்கழி மாதம் 04, 11 ஆம் திகதி சனிக்கிழமைகளில் தடுப்பூசி வழங்குவதற்கு யாழ். மாவட்டத்தில் யாழ் போதனா வைத்தியசாலை மற்றும் பருத்தித்துறை ஊர்காவற்துறை தெல்லிப்பழை சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைகளிலும் கிளிநொச்சி முல்லைத்தீவு வவுனியா மன்னார் ஆகிய மாவட்டங்களில் உள்ள மாவட்ட பொது வைத்தியசாலைகளிலும் இத்தடுப்பூசிகள் வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
60 வயதிற்கு மேற்பட்டவர்களில் அவ்வாறான நிலைமைகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தடுப்பூசி வழங்கப்படாது திருப்பி அனுப்பப்பட்டவர்கள் தடுப்பூசி வழங்கும் நிலையத்தில் உள்ள வைத்திய அதிகாரியின் பரிந்துரைக் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு மேற்குறிப்பிட்ட வைத்தியசாலைகள் ஏதாவது ஒன்றில் தமக்குரிய மூன்றாவது தடுப்பூசியினை (Pfizer) பாதுகாப்பாக பெற்றுக்கொள்ள முடியும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.