சுண்டிக்குளம் தேசிய வனத்தில் உயிர் பல்வகைமை ஆய்வு முன்னெடுப்பு ஆரம்பம்!! (படங்கள்)
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திண்ணை குழுமம் மற்றும் சி.சி.எச் நிறுவனம் ஒன்றிணைந்து முன்னெடுக்கவுள்ள சுண்டிக்குளம் தேசிய வனத்தின் நிலைபேறான அபிவிருத்தி நோக்கிலான உயிர் பல்வகைமை ஆய்வு முன்னெடுப்பின் ஆரம்ப நிகழ்வு இன்று (06) திங்கட்கிழமை மாலை யாழ்ப்பாணம் திண்ணை விடுதியில் இடம்பெற்றது.
சி.சி.எச் நிறுவனத்தின் நிறுவுனர் ரீ.ரீ.மயூரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி. சிறிசற்குணராஜா, திண்ணை குழுமத்தின் தலைவர் ஞானம் ஜெயசீலன், விஞ்ஞான பீடாதிபதி பேராசிரியர் பு. ரவிராஜன், விவசாய பீடாதிபதி கலாநதி எஸ். வசந்தரூபா, ஆய்வுக் குழுவின் இணைப்பாளர் பேராசிரியர் க.கஜபதி, விவசாய ஆய்வு நிலைய பணிப்பாளர் எஸ். ராஜேஸ்கண்ணா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இரட்ணம் செந்தில்மாறன், வன வள பாதுகாப்பு திணைக்கள பிரதிநிதிகள், விரிவுரையாளர்கள், ஆய்வாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
சுண்டிக்குளம் தேசிய வனத்தின் உயிர் பல்வகைமை ஆய்வின் மூலம் நிலைபேறான அபிவிருத்தி நோக்கில் விரிவுபடுத்தக்கூடிய வாய்ப்புக்கள், சுற்றாடல் பாதுகாப்பு, சூழல் நேய அணுகு முறைக்கான ஒன்றிணைந்த ஒத்துழைப்புக்கள், இவற்றில் சிறுவர்களுக்கான கற்றல் வாய்ப்புக்கள், பிராந்தியத்தில் காணப்படும் உயர் தர உயிர்பல்வகைமை தொடர்பான அறிவு விருத்தி என்பன தொடர்பில் முதலாம் கட்ட ஆய்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”