புதிய குற்றச்சாட்டு வழக்கு: ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறை- மியான்மர் நீதிமன்றம் உத்தரவு…!!
மியான்மரில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி அந்நாட்டு ராணுவம், ஜனநாயக ரீதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசை கவிழ்த்துவிட்டு, ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியது. அதை தொடர்ந்து, நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மைன்ட் உள்பட முக்கிய அரசியல் தலைவர்கள் மற்றும் மூத்த அரசு அதிகாரிகளை ராணுவம் கைது செய்தது.
அப்போது முதல் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ள ஆங் சான் சூகி மீது, தகவல் தொடர்பு சாதனங்களை சட்டவிரோதமாக இறக்குமதி செய்தது, கொரோனா கட்டுப்பாட்டு விதிமுறைகளை கடைபிடிக்காததன் மூலம் தேசிய பேரிடா் மேலாண்மைச் சட்டத்தை மீறியது உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
ஆங் சான் சூகி
இந்த நிலையில் இதுதொடர்பாக விசாரணை நடத்திய மியான்மர் நீதிமன்றம், ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டு சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல், அதிபர் வின் மைன்டுக்கும் 4 ஆண்டு சிறை தண்டனை விதித்தது.
ஆனால், ஆங் சான் சூகி எப்போது சிறையில் அடைக்கப்படுவார் என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது. ஆங் சான் சூகிக்கு வழங்கப்பட்ட தண்டனைக்கு கடும் கண்டனம் எழுந்துள்ளது.