இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு!! (படங்கள்)
இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு மேலதிக அரசாங்க அதிபர்(காணி) திரு.எஸ்.முரளிதரன் அவர்களின் தலைமையில் இன்றைய தினம் (07.12.2021) காலை 9 மணிக்கு மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் உயர் திரு.க.மகேசன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து சிறப்பித்ததுடன், யாழ். மாவட்டத்தின் திட்டமிடல் பணிப்பாளர் திருமதி.எஸ்.நிக்கொலஸ்பிள்ளை, , யாழ். மாவட்டத்தின் சமுர்த்திப்பணிப்பாளர் திரு.ரி.விஸ்வரூபன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணத்தின் சமூக பாதுகாப்பு சபையின் சிரேஷ்ட இணைப்பதிகாரி திரு.பா.பிரதீபன், உதவி மாவட்டச் செயலாளர் திருமதி எஸ்.சி.என்.கமலராஜன்,
பிரதேச செயலாளர்கள்,உதவிப்பிரதேச செயலாளர்கள்,சமூக பாதுகாப்பு மாவட்ட இணைப்பதிகாரி ,சனச வங்கி முகாமையாளர், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் இலங்கை சமூக பாதுகாப்பு சபையின் மாணவர்களுக்கான பாதுகாப்பு திட்டத்தில் இணைக்கப்பட்டு 2020 ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 120 மாணவர்கள் 5000 ரூபா முதல் 50000 ரூபா வரையான புலமைப்பரிசிலிற்கான காசோலைகள், சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
மாணவப்பருவத்திலேயே முதுமைப்பாதுகாப்பை ஏற்படுத்திக்கொள்ளும் இப் பாதுகாப்பு திட்டத்தில் தமது பிள்ளைகளை இணைத்துக்கொள்ளும் பெற்றோர்கள் தமது பிள்ளைகள் தமது முதிர்வுக்காலத்தில் அரசதுறை வேலைவாய்ப்பை பெற்றுக்கொள்ளாத போதும் மாதாந்த ஓய்வுதியம் ஒன்றினைப் பெற்றுக்கொள்ளத்தக்க வாய்ப்பினை இப் பாதுகாப்பு திட்டம் வழங்குவதுடன் மாணவர்களுக்கு தரம் 5 புலமைப்பரிசில் சித்தி, க.பொ.த. சாதரண சித்தி (சிறப்பு) , க.பொ.த. உயர்தர (பல்கலைக்கழக அனுமதி) என்பவற்றிற்கு பெறுமதி வாய்ந்த புலமைப்பரிசில்களை வழங்கி மாணவர்களுக்கான கல்வி ஊக்குவிப்பினை வழங்கும் திட்டமாகவும் சமூக பாதுகாப்பு சபையின் மாணவர்களுக்கான பாதுகாப்பு திட்டம் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இத்திட்டம் அமுல்படுத்தலில் யாழ். மாவட்டம் முன்னிலை வகித்து செயற்படுவதுடன் ஏனைய மாவட்டங்களிற்கும் முன் உதாரணமாக இத்திட்டத்தை நடைமுறைப்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”