முடியாதது என்று எதுவுமில்லை என்பதை புதிய இந்தியா நிரூபித்துள்ளது: பிரதமர் மோடி பெருமிதம்…!
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை, உரத் தொழிற்சாலை உள்பட 9,600 கோடி ரூபாயிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஆளுநர் ஆனந்திபென் படேல், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், கோரப்பூர் உர தொழிற்சாலை விவசாயிகளுக்காகவும், வேலை வாய்ப்புக்காகவும் கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் அதன் முக்கியத்துவம் அனைவருக்கும் தெரியும் என்றும் கூறினார்.
ஆனால் இதற்கு முந்தைய அரசு இந்த தொழிற்சாலை குறித்து எந்த அக்கறையும் காட்டவில்லை. கோரக்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வேண்டும் என்று நீண்ட கால கோரிக்கை, ஆனால் அதற்காக நிலம் ஒதுக்காமல் 2017-க்கு முன்பு இந்த மாநிலத்தை ஆண்ட அரசு சாக்குபோக்கு சொல்லியது என்றும் பிரதமர் குற்றம்சாட்டினார்.
ஆனால் தற்போதைய பா.ஜ.க. அரசு வளர்ச்சியை நோக்கமாக கொண்டு கடினமாக உழைப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். புதிய இந்தியாவுக்கு முடியாதது என்று எதுவும் இல்லை என்பதே கோரக்பூரில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சி நிரூபித்துவிட்டது என்றார்.
மத்திய அரசும், மாநில அரசும் இணைந்து பணியாற்றுவது தொடர்பாக பேசிய பிரதமர், உத்தரப்பிரதேசத்தில் இரட்டை எஞ்சின் ஆட்சி நடைபெறுவதாகவும் இதனால் வளர்ச்சி பணிகள் இரட்டை வேகத்தில் நடைபெறுகின்றன. மேலும் பணிகள் அனைத்தும் நேர்மையான நோக்கத்துடன் முடிக்கப்படுகின்றன. அதற்கு இயற்கை பேரிடம் போன்ற எதுவும் தடையாக இருக்க முடியாது என்றார்.
உத்தரப்பிரதேசத்தின் முக்கிய எதிர்க்கட்சியான சமாஜ்வாதி கட்சி குறித்து பேசிய பிரதமர் மோடி, சிவப்பு தொப்பி அணிபவர்களை பற்றி இந்த மாநில மக்களுக்கு நன்றாக தெரியும் என்றார். தீவிரவாதிகளுக்கு கருணை காட்டவும் அவர்களை சிறையில் இருந்து விடுவிக்கும் நோக்கத்துடன் ஆட்சி அமைக்க சமாஜ்வாதி கட்சி நினைக்கிறது. எனவே உத்தர பிரதேச மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சிவப்பு தொப்பி என்பது சிவப்பு எச்சரிக்கையை போன்றது என பிரதமர் தமது பேச்சில் குறிப்பிட்டார்.