பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி பிரான்சில் கைது…!!!
சவுதி அரேபியா அரசையும் அந்த நாட்டு மன்னர் மற்றும் இளவரசர்களையும் கடுமையாக விமர்சித்து கட்டுரைகளை எழுதி வந்தவர் அந்த நாட்டின் புகழ்பெற்ற பத்திரிகையாளர் ஜமால் கஷோகி.
இவர் கடந்த 2018-ம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் உள்ள சவுதி அரேபியா தூதரகத்தில் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்.
உலகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த படுகொலையின் பின்னணியில் சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இருப்பதாக துருக்கி குற்றம் சாட்டியது. ஆனால் சவுதி அரேபிய அரசு இதனை திட்டவட்டமாக மறுத்தது.
இதற்கிடையே, சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் உத்தரவின் பேரிலேயே ஜமால் கஷோகி படுகொலை செய்யப்பட்டதாக அமெரிக்க உளவுத்துறை சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டது. ஆனால் இந்த அறிக்கை முற்றிலும் பொய்யானது என சவுதி அரேபியா மறுத்தது.
இந்நிலையில், பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளி ஒருவரை பிரான்ஸ் நாட்டில் கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். விசாரணையில் அவர் சவுதி அரண்மனையில் காவலாளியாக வேலை பார்த்ததும், தேடப்படும் 26 குற்றவாளிகளில் அவரும் ஒருவர் என்பதும் தெரிய வந்தது.