வாரத்தில் 4½ நாட்கள் மட்டுமே வேலை: ஐக்கிய அரபு அமீரகம் அறிவிப்பு…!!
அபுதாபி, அஜ்மான், புஜைரா, சார்ஜா, துபாய், ராஸ் அல் கைமா மற்றும் உம் அல்-குவைன் ஆகிய 7 அமீரகங்களை உள்ளிட்டக்கிய முடியாச்சி பாராக ஐக்கிய அரபு அமீரகம் விளங்கி வருகிறது. இதன் தலைநகரமாக அபுதாபி இருந்து வருகிறது. பெரும்பாலான முஸ்லிம் நாடுகளில் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக இருந்து வருகிறது. அதன்படியே ஐக்கிய அரபு அமீரகத்திலும் வெள்ளிக்கிழமை விடுமுறை நாளாக உள்ளது.
அதாவது, ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசு ஊழியர்களுக்கு ஞாயிறு முதல் வியாழன் வரை வேலை நாட்களாகவும், வெள்ளிக்கிழமை ஒருநாள் மட்டும் விடுமுறை நாளாகவும் இருக்கிறது.
அங்கு பல ஆண்டுகளாக இதே நடைமுறை கடைப்பிடிக்கப்பட்டு வரும் நிலையில் பல தனியார் நிறுவனங்களும், பள்ளிக்கூடங்களும் இதையே பின்பற்றுகின்றன.
இந்த நிலையில் தற்போது இதில் மிகப்பெரிய மாற்றத்தை ஐக்கிய அரபு அமீரகம் அறிவித்துள்ளது. அதன்படி ஐக்கிய அரபு அமீரகத்தில் வேலை நாட்கள் 6-ல் இருந்து 4½ நாட்களாக குறைக்கப்பட்டுள்ளது.
அதாவது, மேற்கத்திய நாடுகளை போலவே ஐக்கிய அரபு அமீரகத்திலும் இனி திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை வேலை நாட்கள் ஆகும். அதிலும் வெள்ளிக்கிழமை முஸ்லிம்களின் புனித நாளாக கருதப்படுவதால் அன்று ½ நாள் மட்டுமே வேலை நாள் ஆகும்.
இந்த புதிய நடைமுறை குறித்து ஐக்கிய அரபு அமீரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அடுத்த ஆண்டு (2022) ஜனவரி 1-ந்தேதி முதல் புதிய பணி நேரம் அறிமுகமாக இருக்கிறது. அதன்படி, திங்கட்கிழமை முதல் வியாழக்கிழமை வரை காலை 7.30 முதல் மாலை 3.30 வரை 8 மணி நேர பணியும், வெள்ளிக்கிழமை காலை 7.30 முதல் மதியம் 12 வரை 4.30 மணி நேர பணியும் நடைமுறைக்கு வருகிறது. வெள்ளி மதியம் 1.15 மணிக்கு தொழுகை முடிந்ததிலிருந்து சனி, ஞாயிறு உள்பட 2½ நாட்கள் விடுமுறையாகும்.
வேலை-வாழ்க்கை சமநிலையை அதிகரிப்பதற்கும் சமூக நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும் இந்த புதிய பணி திட்டம் நடைமுறைக்கு வருகிறது.
உலகளவில் வேலை நாட்கள் 5 ஆக இருந்து வரும் சூழலில் அதற்கும் குறைவாக 4½ நாட்களை வேலை நாட்களாக அறிமுகப்படுத்தும் முதல் நாடு ஐக்கிய அரபு அமீரகம்தான்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.