;
Athirady Tamil News

வடமாராட்சியில் கரையொதுங்கிய சடலங்களில் ஒன்றை சிம்பன்சி குரங்கு என புதைப்பு?

0

வடமராட்சி கிழக்கு மணற்காடு பகுதியில் நவம்பர் 16ஆம் திகதி மீட்கப்பட்ட சடலத்தை சிம்பன்சி குரங்கின் உடையது எனத் தெரிவித்து விசாரணைகள் எவையுமின்றி பொலிஸார் புதைத்துள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

வடமராட்சி கடற்பரப்பில் 6 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்ற நிலையில் பருத்தித்துறை ஆதார மருத்துவனையில் 5 சடலங்களே ஒப்படைக்கப்பட்டுள்ளன.

முதலாவதாக கரை ஒதுங்கிய சடலத்தை பொலிஸார் புதைத்துள்ளனரா? என்று சந்தேகம் எழுந்துள்ளது.குறித்த சடலம் சிம்பன்சி குரங்கின் சடலம் என அந்தச் சடலம் புதைக்கப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தமுடியாத தகவல்கள் தெரிவிக்கின்றன.

வடமராட்சி கடற்பரப்பில் கடந்த வாரம் வெவ்வேறு தினங்களில் 5 சடலங்கள் கரை ஒதுங்கியுள்ளன என்றும் அவை பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவை தொடர்பில் தகவல்கள் கிடைக்காதமை பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் கடந்த நவம்பர் 16ஆம் மணற்காடு கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம் நீதிமன்றுக்கு தகவல் வழங்கப்படாமல் புதைக்கப்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விலங்குகளின் சடலம் மீட்கப்பட்டாலும் நீதிவானின் அனுமதியுடன் கால்நடை வைத்திய அதிகாரியின் விசாரணைக்கு உள்படுத்தப்படவேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”

You might also like

Leave A Reply

Your email address will not be published.