அரசின் குறைபாடு பொருளாதாரத்தை அதால பாதாளத்திற்கு தள்ளி விட்டிருக்கின்றது!!
அரசின் வெளிநாட்டு கொள்கை நிலையில்லாது தளம்பலாக உள்ளமை, ராஜதந்திர தொடர்புகளை பேணுவதில் உள்ள குறைபாடு என்பன இன்று நாட்டின் பொருளாதாரத்தை அதால பாதாளத்திற்கு தள்ளி விட்டிருக்கின்றது என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் தெரிவித்தார்.
அரசாங்கத்தின் வெளிநாட்டு கொள்கை நிலையில்லாது தளம்பலாக உள்ளது. நாடுகளிடையில் ராஜதந்திர தொடர்புகளை பேணுவதில் சிக்கல் நிலைமை தோன்றி உள்ளது. இவை நாட்டின் பொருளாதாரத்தை அதால பாதாளத்தில் தள்ளிவிட்டிருக்கின்றது. இன்று அந்நிய செலாவணியில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறை, நாட்டிலே பொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி இருக்கின்றது. மசகு எண்ணெயை இறக்குமதி செய்துகொள்ள முடியாத நெருக்கடி நிலை தோன்றி உள்ளது. பல்வேறு தொழில் துறைகளிலான மூலப்பொருள் பற்றாக்குறையாக உள்ளது. துறைமுகத்தை வந்தடைந்துள்ள நூற்றுக்கணக்கான கொள்கலன்களை வெளியிலே கொண்டுவர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இவற்றுக்கான தீர்வை அரசாங்கத்திடம் காண முடியவில்லை.
இன்றைய கோட்டாபய ராஜபக்சே தலைமையிலான அரசாங்கம், அரசியல் பலத்தை பெறுவதற்கு அன்று பல போலி கதைகளையும், போலி நாடகங்களையும் அரங்கேற்றியது. சிங்கள பௌத்த சமூகத்தை தூண்டி விடுவதற்க்கு அமெரிக்கா உட்பட மேற்கத்திய நாடுகளை இலங்கையின் விரோதியாக காட்டியது. முஸ்லீம் நாடுகளை பயங்கரவாதத்திற்கு துணை நிட்ப்பவர்களாகவும், சிங்கள – பௌத்தத்திற்கு எதிரானவர்களாகவும் சித்தரித்தது. அதன் மூலம் இலங்கைக்கு இருந்த வெளிநாட்டு-கொள்கை தொடர்பான நடுநிலை, அணிசேரா தன்மையை சீர்குலைத்தது. இவற்றால், பூகோள அரசியல்- பொருளாதார சூழலில் இருந்து இன்று இலங்கை ஓரம்கட்டப்பட்ட நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறது.
இன்று அரசாங்க அமைச்சர்கள் “வெளிநாடுகளே தேவை இல்லை” என்று பாராளுமன்றத்தில் சிங்கள மொழியில் முழங்குகின்றனர். மறுபக்கம் அன்று விரோதியாக காட்டிய அமெரிக்கா உட்பட ஐரோப்பிய நாடுகளிடம் கையேந்தி நிற்கின்றனர். இன்னொரு பக்கம் “முஸ்லீம்களும் வேண்டாம், இஸ்லாமிய நாடுகளும் வேண்டாம்” என்றவர்கள், வங்காளதேசம், ஓமான் மற்றும் குவெத் என கடன் உதவி கேட்டு நிற்கின்றனர். இப்போதாவது சர்வதேச அரசியலின் அவசியத்துவதையும், உண்மையையும் நாட்டின் பெரும்பாண்மை சமூகத்திற்கு அரசாங்கம் சொல்ல வேண்டும்.
ராஜ தந்திர உறவுகளில் பாரிய முறுகல் நிலையை இன்றைய அரசாங்கம் தோற்றுவித்திருக்கிறது. கொழும்பு துறைமுக முனையம், திருகோணமலை எண்ணெய் குதங்கள் என இந்தியாவுடனும், சேதன உரம் இறக்குமதியில் சீனாவுடனும் முறுகல் நிலையை தோற்றுவித்திருக்கிறது. எக்ஸ்பிரெஸ் பேர்ல் கப்பல் தீப்பிடித்தது, மற்றும் மூழ்கியதன் பின்னரான அரசன் நடவடிக்கைகள் தெளிவற்று உள்ளது. இழப்புக்கான நட்டஈடு பெறுவது தொடர்பான நடைமுறைகள் மூடி மறைக்கப்படுகிறது. இவையெல்லாம் அரசாங்கத்தில் உள்ள கபினட் அமைச்சர்களுக்கு, அவர்களது விடயங்கள் தொடர்பாக ராஜதந்திர ரீதியான விடயங்களை கையாளுவதில் இயலுமையின்மையையும், தெளிவற்ற நிலைமையையும் காட்டுகின்றது.
அரசாங்கம் நிலையான வெளிநாட்டு கொள்கையொன்றை முன்னெடுக்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள ராஜதந்திர உறவுகளை சீர்படுத்த வேண்டும். சர்வதேச பூகோள அரசியல் பொருளாதார நிலைமைகளுக்கு ஏற்ப உபாயங்களை வகுத்துக்கொள்ள வேண்டும். அதன் மூலம் இன்று நாட்டில் ஏற்ப்பட்டுள்ள அந்நிய செலாவணி நெருக்கடிக்கு உடனடியான தீர்வை எட்ட வேண்டும். அவ்வாறு இல்லாத போது உலக நாடுகளில் இருந்து ஓரம்கட்டப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட நாடாக, மீள கட்டியெழுப்ப முடியாத நிலைக்கு, நாடு தள்ளப்படுவதை யாராலும் தடுக்க முடியாது.