நாட்டையே உலுக்கிய ராணுவ ஹெலிகாப்டர் விபத்து- முப்படை தளபதிகள் அவசர ஆலோசனை..!!
கோவை மாவட்டம் சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரது மனைவி உள்ளிட்ட 14 பேருடன் வெலிங்டன் மையத்துக்கு சென்ற ராணுவ ஹெலிகாப்டர் மலைப்பகுதியில் விபத்துக்குள்ளானது. வெலிங்டன் ராணுவ முகாமில் இருந்து 10 கிமீ தொலைவில் உள்ள காட்டேரி மலைப்பாதை அருகில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இதில், ஹெலிகாப்டர் சிதைந்து தீப்பிடித்து எரிந்தது.
சம்பவ இடத்தில் இருந்து 10 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், தலைமை தளபதியின் நிலை என்ன? என்பது தெரியவில்லை. மீட்பு பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த விபத்து குறித்து விமானப்படை மற்றும் ராணுவம் தரப்பில் விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக போலீசாரும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தலைமை தளபதி சென்ற ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது நாட்டையே உலுக்கியிருக்கும் நிலையில், முப்படை தளபதிகள் அவசர ஆலோசனை நடத்தினர். இந்த ஆலோசனையில் முப்படைகளின் மூத்த அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதேபோல் ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங், தனது துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அதன்பின்னர், விமானப்படை தளபதியை சம்பவ இடத்திற்கு செல்லும்படி உத்தரவிட்டுள்ளார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று குன்னூர் சென்று, மீட்புப்பணிகள் மற்றும் விபத்து தொடர்பாக நேரில் ஆய்வு செய்கிறார்.