பிபின் ராவத் சென்ற ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் யார், யார்?…!!
முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. ராணுவ ஹெலிகாப்டர் விபத்தை சந்திப்பதற்கு முன்னர் என்ன நடந்தது என்பது குறித்து தகவலை பார்ப்போம்.
வெலிங்டனில் உள்ள ராணுவ கல்லூரியில் உரை நிகழ்த்துவதற்காக பிபின் ராவத் ராணுவ ஹெலிகாப்டரில் புறப்பட்டார். குன்னூர் அருகே மலைப் பகுதி மீது பறந்த போது அந்த ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. 6 ஆம்புலன்ஸ்கள் மூலம் மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். காட்டேரி தேயிலை தோட்டம் பகுதியில் ஹெலிகாப்டரின் பாகம் கிடந்தது. ஹெலிகாப்டர் நீண்ட நேரம் தீப்பற்றி எரிந்ததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டது.
கடும் பனிமூட்டம் மற்றும் போதிய வெளிச்சமின்மையால் விபத்து நடந்திருக்கலாம் என ராணுவ அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து நடந்து பகுதியில் இருந்து முதல் கட்டமாக 4 உடல்கள் மீட்கப்பட்டன. மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதன்பின்னர் பலி எண்ணிக்கை அதிகரித்து 12 வரை சென்றது. ஹெலிகாப்டர் கீழே விழுந்தபோது தீப்பிழம்பு எழுந்ததாக அந்த பகுதியில் வசிப்போர் தெரிவித்தனர்.
விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரில் ராவத் அவரது மனைவி மதுலிகா ராவத், பிரிகேடியர் லிட்டர், லெப்டினன்ட் கர்னல் ஹர்ஜிந்தர் சிங், நாயக் குர்சேவக் சிங், நாயக் ஜிதேந்தர் குமார், நாயக் விவேக் குமார், நாயக் பி சாய் தேஜா, ஹவால்தார் சத்பால் மற்றும் விமானிகள் ஆகியோர் இருந்துள்ளனர்.