’டொலர் இழப்பு தீர்க்கும் பிரச்சினையல்ல’ !!
மசகு எண்ணெயை இறக்குமதி செய்வதற்கு தேவையான டொலர்கள் கிடைக்காததால் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும், விநியோகஸ்தர்கள் ரூபாயில் தீர்வை தேடுவதாகவும் எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
நாட்டில் இன்னும் 26 நாட்களுக்கு போதுமான மசகு எண்ணெய் இருப்பதாகவும், தொடர்ந்து மசகு எண்ணெய் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
தற்காலிகமாக மூடப்பட்டிருந்த சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளை மீள ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
டொலர் இழப்பு என்பது அமைச்சு மட்டத்தில் தீர்க்கப்படக் கூடிய பிரச்சினையல்ல எனவும் இதற்கு அமைச்சரோ அல்லது தலைவரோ பொறுப்பல்ல எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுவரை 59 மில்லியன் டொலர் செலவழித்து 7 இலட்சம் பீப்பாய் மசகு எண்ணெயை இறக்குமதி செய்துள்ளதாகவும் இந்த நாட்களில் கொள்ளளவு குறைந்ததால் 26 நாட்களுக்கு தேவையான மசகு எண்ணெய் இறக்குமதி செய்யப்பட்டுள்ளாகவும் குறிப்பிட்டார்.
மழைக்காலம் முடிவடைந்துள்ளதால் மின்சார சபைக்கு எரிபொருள் தேவைப்படலாம் எனவும் தற்போது 65,000 மெற்றிக் தொன் எரிபொருள் எண்ணெய் இருப்பதாகவும், எதிர்காலத்தில் தேவையான அளவைப் பெற்றுக் கொள்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.