சஸ்பெண்டு ஆன பஸ் டிரைவர், கண்டக்டர் மீது இரக்கம் காட்டிய மீனவ பெண்…!!
இக்கிராமங்களில் உள்ள மீனவர்கள் பலரும் கடலுக்கு சென்று பிடித்து வரும் மீன்கள் மாவட்டம் முழுவதும் உள்ள ஊர்களுக்கு வாகனங்கள் மூலம் கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படும்.
கடற்கரை கிராமங்களில் உள்ள ஏழை மீனவ பெண்கள் பலரும் மீன்களை மொத்தமாக வாங்கி தலைசுமடு மூலம் அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று விற்பனை செய்வார்கள்.
இதற்காக அவர்கள் மீனவ கிராமங்களில் இருந்து அரசு பஸ்கள் மூலம் பக்கத்து கிராமங்களுக்கு செல்வது வழக்கம். பிடித்து வரப்படும் மீன்களை பெரிய வட்டைகளில் வைத்து அவர்கள் பஸ்சில் எடுத்து செல்வார்கள்.
மீன்களுடன் பஸ்சில் செல்லும்போது மீன்வாடை அடிப்பது வழக்கம். இது சில பயணிகளை முகம் சுழிக்க வைத்தாலும் ஏழை பெண்களின் நிலை கண்டு அவர்கள் யாரும் இதை கண்டுகொள்வதில்லை.
ஆனால் சில பஸ் கண்டக்டர்கள் மற்றும் டிரைவர்கள் மீன் விற்கும் பெண்களை பஸ்சில் ஏற்றுவதில்லை என்றும், அவர்கள் நிற்கும் பஸ் நிறுத்தங்களில் பஸ்சை நிறுத்தாமல் செல்வதாகவும் அடிக்கடி புகார்கள் கிளம்பும். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9.30 மணி அளவில் குளச்சல் பஸ் நிலையத்தில் இருந்து வாணியக்குடி என்ற மீனவகிராமத்திற்கு செல்ல மீனவ பெண் செல்வம் (வயது 70) என்பவர் பஸ்சில் ஏறினார்.
அப்போது பஸ்சின் கண்டக்டரும், டிரைவரும் மீன் வாடை அடிப்பதாக கூறி அந்த செல்வத்தை பஸ்சில் இருந்து இறங்குமாறு கூறினர். இரவு நேரம் என்பதால் இனி எப்படி ஊருக்கு செல்வேன் என்று கேள்வி கேட்ட அந்த பெண்ணை அவர்கள் வலுகட்டாயமாக பஸ்சில் இருந்து இறக்கி விட்டனர்.
இதனால் ஆத்திரம் அடைந்த செல்வம், பஸ்சில் இருந்து இறங்கி பஸ்நிலைய நேரக்காப்பாளர் அறைக்கு சென்று நியாயம் கேட்டார். மீன் வாடை அடிப்பதால் என்னை பஸ்சில் ஏற்றமாட்டீர்களா? இரவு நேரத்தில் இப்படி செய்தால் நான் எப்படி ஊருக்கு போவேன்? எனக்கு நியாயம் வேண்டும், என்னை பஸ்சில் அழைத்து செல்ல ஏற்பாடு செய்யுங்கள் என்று ஆவேசமாக கூறினார்.
ஆனால் செல்வத்தின் பேச்சை ஊழியர்கள் யாரும் கேட்கவில்லை. இதனால் அந்த பெண், பஸ்நிலையத்தில் இருந்தவர்களிடம் தன் இயலாமையை கூறி அழுதார்.
மூதாட்டி செல்வம் கண்ணீருடன் புலம்பியதை பஸ் நிலையத்தில் நின்ற பயணி ஒருவர் செல்போனில் பதிவு செய்து சமூக வலைதளத்தில் பதிவிட்டார். அந்த வீடியோ சிறிதுநேரத்தில் வைரலானது.
வீடியோவை பார்த்த சமூக ஆர்வலர்கள் மூதாட்டி செல்வத்தை பஸ்சில் இருந்து இறக்கிவிட்ட டிரைவர், கண்டக்டர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.
முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினும் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், குமரி மாவட்டத்தில் மீன் விற்பனை செய்து வந்த தாய் போன்ற ஒருவரை பேருந்து நடத்துனர் இறக்கிவிட்ட சம்பவம் என்னை அதிர்ச்சி அடைய வைத்தது, என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கிடையே போக்குவரத்து உயர் அதிகாரிகள் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டனர். கண்டக்டர் மணிகண்டன், டிரைவர் மைக்கேல் மற்றும் நேரக்காப்பாளர் ஜெயக்குமார் ஆகியோரை பணியில் இருந்து சஸ்பெண்டு செய்தனர்.
பஸ்சில் இருந்து தன்னை இறக்கிவிட்ட டிரைவர், கண்டக்டர் இருவரும் சஸ்பெண்டு செய்யப்பட்ட தகவல் மீனவ பெண் செல்வத்திற்கு தெரிவிக்கப்பட்டது. இதை கேட்டதும் அவர் கண்கலங்கினார்.
அவர் கூறியதாவது:- சம்பவம் நடந்த இரவு என்னை பஸ்சில் இருந்து இறக்கிவிட்ட போது என்னால் தாங்கி கொள்ள முடியவில்லை. இந்த இரவு நேரத்தில் எப்படி ஊருக்கு போவேன் என்றுதான் வருத்தப்பட்டேன்.
என்னை பஸ்சில் இருந்து இறக்கிவிட்ட ஊழியர்கள் இருவருக்கும் என்னை போலவே அம்மா இருப்பார். அவரது அம்மாவுக்கு இப்படி யொரு சம்பவம் நடந்தால் அவர் பொறுத்து கொள்வாரா?
இனியாவது அவர்கள் தாய்க்கு சமமானவர்களை மரியாதையுடன் நடத்த கற்று கொள்ள வேண்டும்.
எங்களை போன்றவர்களை அவமதிக்கும் முன்பு இதை நினைத்து கொள்ள வேண்டும், என்றார்.
முதல் நாள் ஆத்திரத்தில் ஆவேசப்பட்டாலும் மறுநாள் தன்னை அவமதித்த ஊழியரிடமும் இரக்கம் காட்டி பேசிய மீனவ பெண்ணை அனைவரும் பாராட்டுகிறார்கள்.