;
Athirady Tamil News

விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் அதிநவீனமானது: மிகுந்த பாதுகாப்பு வசதிகள் கொண்டது…!!

0

* எம்ஐ-17வி5 எனப்படும் இந்த ஹெலிகாப்டர், ரஷிய தயாரிப்பு. கடந்த 2012-ம் ஆண்டு இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டது.

* ரஷியன் ஹெலிகாப்டர்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான கஸானின் தயாரிப்பான எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர், இந்த வகை நடுத்தர ஹெலிகாப்டர்களில் அதிநவீனமானது.

* எம்ஐ-8/17 ரக ஹெலிகாப்டர்களிலேயே தொழில்நுட்ப ரீதியாக மிகவும் முன்னேறிய எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர், சக்திவாய்ந்த இரட்டை என்ஜின்கள் பொருத்தியது. ராணுவ பணிகளுக்கு என்றே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்டது.

* அதிகபட்சம் மணிக்கு 250 கி.மீ. வேகத்தில் செல்லக்கூடிய இந்த ஹெலிகாப்டர், 36 பேர் வரை சுமந்து செல்லக்கூடியது.

* அதிகபட்சம் 13 ஆயிரம் கிலோ எடையுடன் பறக்கத் தொடங்கக்கூடிய இந்த ஹெலிகாப்டர், அதிக அளவாக 4 ஆயிரம் கிலோ எடையை வெளிப்புறமாக சுமந்துசெல்லும் திறன் கொண்டது.

* நெருக்கடிகளின்போது மனிதாபிமான பணிகளையும், பேரழிவுகளின்போது நிவாரண நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவும், போக்குவரத்து பணிகளுக்கும் உதவும்வகையில் இந்திய ஹெலிகாப்டர் அணியை வலுப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

* அதன்படி 80 எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர்களை வாங்க 2008-ம் ஆண்டு ரஷியாவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்தது. பிற்பாடு, மேலும் 151 இந்த ரக ஹெலிகாப்டர்களை வாங்கும் வகையில் ஒப்பந்தம் விரிவுபடுத்தப்பட்டது.

* கடந்த 2011-ம் ஆண்டு செப்டம்பரில் இந்த ஹெலிகாப்டர்களின் முதல் தொகுதி, இந்தியா வந்தது. 2012-ம் ஆண்டு பிப்ரவரியில் இந்திய விமானப் படையில் முறைப்படி இணைக்கப்பட்டது.

* தற்போது இந்திய விமானப்படையில் 200-க்கு மேற்பட்ட எம்ஐ-17வி5 ஹெலிகாப்டர்கள் உள்ளன.

* உயரமான மலைப்பகுதிகளுக்கு வீரர்களையும், சரக்குகளையும் கொண்டு செல்லும் நோக்கில் விமானப்படை இந்த ஹெலிகாப்டர்களை தனது படை வரிசையில் சேர்த்துக்கொண்டது.

* இதில், வானிலையை அறியும் ஒரு ரேடாரும், இரவில் பார்ப்பதற்கு வசதியான புதிய தலைமுறை சாதனங்களும் உள்ளன.

* இந்த ஹெலிகாப்டரில் புதிய தானியங்கி செலுத்து அமைப்பும், ‘ஏவியானிக்ஸ் சூட்’ எனப்படும் பல்வேறு முக்கிய சாதனங்களின் தொகுப்பும் உண்டு.

* இந்த ஹெலிகாப்டரில் பாதுகாப்பு வசதிகளும் சிறப்பாக இருக்கும். குறிப்பாக, வெப்பத்தை உணர்ந்து வந்து தாக்கக்கூடிய ஏவுகணைகளுக்கு எதிரான பாதுகாப்பு சாதனம் கொண்டது. எதிர் தாக்குதல் அமைப்புகளும் வலுவாக உண்டு.

* வீரர்கள், ஆயுதங்கள், தளவாடங்களை எடுத்துச்செல்வது, தீயணைப்பு, பாதுகாப்புக்கு உடன் செல்வது, ரோந்து, தேடுதல் மற்றும் மீட்பு, தாக்குதல் என்று ஒரு முழுமையான ‘ஆல்ரவுண்டராக’ வலம்வரும் ஹெலிகாப்டர் இது.

* குறிப்பாக, உலகின் மிக நவீன போக்குவரத்து ஹெலிகாப்டர்களில் ஒன்றாக கருதப்படும் எம்ஐ-17வி5, உயர் ராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் பயணத்துக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளாகி இருப்பதால், இவ்வகை ஹெலிகாப்டர்கள் முழுமையாக ஆய்வுக்குள்ளாகும் என்று கூறப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.