தமிழ் பிரதேச சபை அமைக்க அமைச்சரிடம் கோரிக்கை!!
புத்தளம், உடப்பு பிரதேசத்தில் தமிழ் மக்கள் செறிந்து வாழுகின்ற பிரதேசங்களை இணைத்து புதிய பிரதேச சபை ஒன்றினை உருவாக்கித் தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆராய்ச்சிக் கட்டு பிதேச சபைத் தலைவர் தட்சணாமூர்த்தி தலைமையில் உடப்பு பிரதேச சமூக பிரதிநிதிகள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் அமைச்சில் நேற்று (08) சந்தித்து பல்வேறு விடயங்கள் தொடர்பாகக் கலந்துரையாடினர்.
இதன்போது, உடப்பை சூழவுள்ள பிரதேசத்தில் சுமார் 10 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்கள் வாழ்ந்து வருகின்ற நிலையில், தமிழ் பிரதேச சபை ஒன்றினை உருவாக்குவதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
அத்துடன் உடப்பு கிராமத்திற்கு அச்சுறுத்தலாக விளங்கும் கடலரிப்பினை தடுப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் மீனவர் இறங்குதுறை ஒன்றிற்கான தேவை இருப்பதனால் அதனை அமைத்துத் தருமாறும் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடி தமிழ் பிரதேச சபையை உருவாக்குவதற்கான சாத்தியங்கள் பற்றி ஆராய்வதாக தெரிவித்ததுடன், கடலரிப்பு மற்றும் இறங்குதுறை போன்ற விடயங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.