12 மணிப்பூர் எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை- காங்கிரஸ் புகாரை தள்ளுபடி செய்தார் ஆளுநர்…!!
மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த 12 பாஜக எம்.எல்.ஏ.க்களுக்கு சட்டசபை செயலர்கள் பதவி கூடுதலாக வழங்கப்பட்டது. இதனால் இரட்டை பதவி வாயிலாக ஆதாயம் பெறுவதாக அவர்கள் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இரண்டு சட்டங்கள் வாயிலாக விதிவிலக்கு அளிக்கப்பட்டதன் அடிப்படையில், இந்த கூடுதல் பதவி வழங்கப்பட்டதாக அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.
அதன்பின்னர் இந்த இரண்டு சட்டங்களை மணிப்பூர் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதையடுத்து 12 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யுமாறு ஆளுநரிடம் காங்கிரஸ் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
‘கூடுதல் பதவி வழங்கப்பட்ட போது இரண்டு சட்டங்களும் நடைமுறையில் இருந்ததால் தகுதி நீக்கம் செய்ய தேவையில்லை’ என, தேர்தல் ஆணையம் ஆளுநரிடம் கருத்து தெரிவித்திருந்தது.
தேர்தல் ஆணையம் கருத்து தெரிவித்த பின்னும், தகுதி நீக்கம் தொடர்பான முடிவை அறிவிப்பதில் கால தாமதம் செய்ய கூடாது’ என, ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், இரட்டைப் பதவி ஆதாய விவகாரத்தில் 12 பாஜக எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை என்று கவர்னர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். மேலும், தகுதிநீக்கம் செய்யக் கோரி காங்கிரஸ் தாக்கல் செய்த புகாரையும் தள்ளுபடி செய்தார். அரசியலமைப்பு விதிகளின்படி, தேர்தல் ஆணையம் கூறும் பரிந்துரையின்படி ஆளுநர் நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.