இரவு நேரத்தில் பீகார் ஜெயிலில் மது கேட்டு கதறும் கைதிகள்…!!!
பீகார் மாநிலத்தில் மது விலக்கு அமலில் உள்ளது. இதனால் அங்கு மது விற்பனைக்கும், குடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அம்மாநில முதல்-மந்திரி நிதிஷ்குமார் எச்சரிக்கை விடுத்திருந்தார். மேலும் மது கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கும்படியும் அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதையடுத்து கடந்த சில நாட்களாக போலீசார் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில் மது கடத்தியதாகவும், மது அருந்தியதாகவும் ஏராளமானோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
மதுபாட்டில்கள் அழிக்கப்படும் காட்சி
இதன் காரணமாக அங்குள்ள ஜெயில்கள் அனைத்தும் நிரம்பி வழிகின்றன. பீகாரில் மொத்தம் 59 ஜெயில்கள் உள்ளன. இதில் 46,669 கைதிகளே அடைக்கப்படும் வசதிகள் உள்ளது. ஆனால் தற்போது 72 ஆயிரம் கைதிகள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
நவம்பர் மாதத்தில் கைதிகள் எண்ணிக்கை 10,000க்கும் மேல் அதிகரித்துள்ளது. கடந்த 15 நாட்களில் மட்டும் 8,000 பேர் சிறைகளுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இதே நிலை நீடித்தால், நிலைமையை சமாளிப்பது கடினம் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கைதிகளில் சிலர் இரவு நேரம் குடிக்க மது கேட்டு கதறி அழுவதாகவும், இதனால் மற்ற கைதிகள் தூங்க முடியாமல் அவதிப்பட்டு வருவதாகவும் ஒரு ஜெயில் அதிகாரி தெரிவித்தார்.
குடிகார கைதிகளின் இந்த ரகளையால் ஜெயில் அதிகாரிகள் என்ன செய்வது என்று தெரியாமல் விழிபிதுங்கி உள்ளனர்.