சுகேஷ் சந்திரசேகரின் நெருங்கிய உதவியாளர் கைது- காதலியிடம் அமலாக்கத்துறை தீவிர விசாரணை…!!
அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்ட இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகர், சிறையில் இருந்தவாறே தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக, டெல்லி பொருளாதார குற்றவியல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையில் சுகேஷ் சந்திரசேகர் மற்றும் இந்த மோசடியில் தொடர்புடைய அவரது காதலிகள் மீது அமலாக்கத்துறை பணமோசடி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டது.
இந்த வழக்கில் சுகேஷ் மற்றும் அவரது காதலியும் நடிகையுமான ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை சார்பில் 7000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜாக்குலின் நாட்டை விட்டு வெளியேறாமல் தடுக்கும் வகையில், அவருக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் துபாய் செல்லவிருந்த அவர் தடுத்து நிறுத்தப்பட்டார். பின்னர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார்.
அதன்படி டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஜாக்குலின் ஆஜரானார். அவரிடம் இரண்டு நாட்களாக அமலாக்கத்துறை அதிகாரிகள் பல்வேறு கேள்விகளை கேட்டு வாக்குமூலம் பெற்றனர். இதேபோல் சுகேஷ் சந்திரசேகரின் நெருங்கிய உதவியாளர் பிங்கி இரானியிடமும் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் பிங்கி இரானி கைது செய்யப்பட்டுள்ளார். விசாரணைக்கு சரியாக ஒத்துழைக்காததால் அவரை கஸ்டடியில் வைத்து விசாரிக்க முடிவு செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜாக்குலின் பெர்னாண்டஸ் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இரண்டு முறை அமலாக்கத்துறையால் விசாரிக்கப்பட்டுள்ளார். சுகேஷ் சந்திரசேகர் சம்பந்தப்பட்ட பணம் பறிப்பு மற்றும் அதன்மூலம் ஆதாயம் பெற்றதாக ஜாக்குலின் மீது அமலாக்கத்துறை சந்தேகிக்கிறது. சுகேஷ் தனது காதலி ஜாக்குலின் பெர்னாண்டசுக்கு கொடுத்த ரூ.10 கோடி மதிப்புள்ள பரிசுகளில் ரூ.52 லட்சம் மதிப்புள்ள குதிரையும் ரூ.9 லட்சம் மதிப்புள்ள பாரசீக பூனையும் அடங்கும் என்று அமலாக்கத்துறை தனது குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.