ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு- தென் ஆப்பிரிக்காவில் பூஸ்டர் தடுப்பூசிக்கு அனுமதி…!!
கொரோனாவில் இருந்து உருமாற்றமடைந்த ஒமைக்ரான் வைரஸ் தொற்று, தென்ஆப்பிரிக்காவில் தோன்றி பிற நாடுகளிலும் பரவி வருகிறது. தென் ஆப்பிரிக்காவில் பெருகி வரும் ஒமைக்ரான் காரணமாக புதிய நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது.
தென் ஆப்பிரிக்காவில் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு அடுத்தபடியாக 5 வயதுக்கும் கீழ் இருக்கும் குழந்தைகள் தான் ஒமைக்ரான் தொற்றினால் அதிகம் பாதிப்படையும் பிரிவில் இருப்பதாக அந்நாட்டு மருத்துவத்துறை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒமைக்ரான் வைரசால் அங்கு கொரோனா பாதிப்பின் நான்காம் அலை வேகமெடுத்து வருகின்றது. இம்முறை குழந்தைகள் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய தொற்றுநோய் நிறுவனம் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 19 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பை கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
ஏற்கனவே சில நாடுகள் உருமாறிய கொரோனா வைரஸ் காரணமாக, தடுப்பூசி மருந்தின் மூன்றாவது டோசை (பூஸ்டர் தடுப்பூசி) மக்களுக்கு செலுத்த தொடங்கி உள்ளன.
அவ்வகையில் தென் ஆப்பிரிக்காவிலும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசிசெலுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. பைசர் நிறுவனத்தின் தடுப்பூசி மூன்றாவது டோஸ் செலுத்தலாம் என்றும், 2வது டோஸ் செலுத்திய 6 மாதங்களுக்கு பிறகு மூன்றாவது டோஸ் செலுத்த வேண்டும் என்றும் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது.