கேரளாவில் 21-ந் தேதி முதல் தனியார் பஸ் உரிமையாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்…!!
கேரள மாநிலத்தில் மாணவர்களுக்கான பேருந்து கட்டண விகிதம் மற்றும் வாகன வரியில் இருந்து தனியார் பஸ்களுக்கு விலக்கு அளிப்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை தனியார் பஸ் உரிமையாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக கடந்த நவம்பர் 8-ந் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாநில போக்குவரத்து துறை மந்திரியுடன் கோட்டயத்தில் பேச்சு வார்த்தை நடந்தது. இதில் 10 நாட்களில் கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மந்திரி கூறியதால் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட்டதாக அறிவித்தனர்.
இந்த நிலையில் மீண்டும் வருகிற 21-ந் தேதி முதல் மாநிலம் தழுவிய வேலை நிறுத்த போராட்டம் நடத்தப்படும் என தனியார் பஸ் உரிமையாளர்களின் ஐக்கிய பேரவை அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக அவர்கள் கூறியதாவது:-
எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டபோது, விரைவில் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என மாநில அரசு சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
எனவே வருகிற 21-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம். பெட்ரோல், டீசல் விலை உயர்வு மற்றும் கொரோனா நெருக்கடியால் எங்கள் தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. எனவே எங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடுவதை தவிர வேறு வழியில்லை.