பிரதமர் மோடி இன்று உ.பி. பயணம் – ஐந்து நதிகளை இணைக்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்…!!
உத்தர பிரதேசம் மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடிக்க பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. இதனால் தொடங்கப்பட்ட திட்டங்கள் விரைவாக முடிக்கப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடியால் திறந்து வைக்கப்பட்டு வருகிறது.
மேலும், பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி வருகிறார். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டால் நலத்திட்டங்கள் அறிவிக்க முடியாத நிலை ஏற்படும். இதனால் மத்திய, மாநில அரசுகள் இணைந்து திட்டங்களை விரைவாக முடித்து வருகின்றன. பிரதமர் மோடி கடந்த மாதத்தில் இருந்து பலமுறை அங்கு சென்று வருகிறார்.
இந்நிலையில், உத்தர பிரதேச மாநிலம் பல்ராம்பூர் பகுதிக்கு பிரதமர் மோடி இன்று செல்கிறார். அங்கு ரூ.9,800 கோடி செலவில் முடிக்கப்பட்டுள்ள சர்யு நஹார் தேசிய திட்டத்தை திறந்து வைக்கிறார். கடந்த நான்கு ஆண்டுகளில் இந்த திட்டத்திற்கு ரூ.4,600 கோடி செலவிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் ககாரா, சர்யு, ராப்தி, பங்காங்கா, ரோஹினி ஆகிய ஐந்து நதிகளையும் இணைக்கும். அந்த பகுதியில் இது நீர் ஆதாரத்திற்கு மிகப்பெரிய வகையில் உதவும். இத்திட்டம் மூலம் 14 லட்சம் ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெற முடியும். 6,200 கிராமத்தைச் சேர்ந்த 29 லட்சம் விவசாயிகள் பயன்பெறுவர்.